Published : 01 Jun 2017 11:41 AM
Last Updated : 01 Jun 2017 11:41 AM

4 நாட்களில் தாமிரபரணி நீர் முற்றிலும் தடைபடும்: மறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரி அதிர்ச்சி தகவல்

கடையநல்லூர் நகராட்சி 2 , 3 ஆகிய வார்டு மக்கள் குடிநீர் கேட்டு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். அவர்களிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, ``அடுத்த 4 நாட்களில் தாமிரபரணி தண்ணீர் விநியோகம் முற்றிலும் தடைபடும் சூழல் நிலவுகிறது” என, நகராட்சி பொறியாளர் தெரிவித்தார்.

கடையநல்லூர் நகராட்சியில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை பிரச்சினை நீடிக்கிறது. இதற்கு தீர்வு காண நகராட்சி நிர்வாகம் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற ஆதங்கம் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது. நாளுக்கு நாள் லாரிகளில் தண்ணீர் பெறுவதற்கான செலவும் அதிகமாகி வருகிறது. தற்போது ஒரு லாரி தண்ணீரை ரூ.5 ஆயிரத்துக்கு விலைக்கு வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு மக்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

கடையநல்லூர் நகராட்சி 2, 3-வது வார்டு பகுதியைச் சேர்ந்த ஏராள மான பெண்கள், காலி குடங்களுடன் செங்கோட்டை- ராஜபாளையம் சாலையில் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த, கடையநல்லூர் நகராட்சி அதி காரிகளும், போலீஸாரும் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், மறியல் கைவிடப்பட்டது. அரை மணி நேர போக்குவரத்து பாதிப்பும் சீரானது.

பேச்சுவார்த்தை

தொடர்ந்து அப்பகுதி பொது மக்களுடன் கடையநல்லூர் காவல் நிலையத்தில், வட்டாட்சியர் மாரியப் பன் பேச்சுவார்த்தை நடத்தினார். காவல் உதவி ஆய்வாளர் சில்வியா ஜாஸ்மின், நகராட்சி ஆணையர் அய்யூப்கான், நகராட்சி பொறியா ளர் கிறிஸ்டோபர், அலுவலர் ஹாஜாமைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகராட்சியில் ஒரு பகுதியில் தொடர்ந்து தண்ணீர் வருவதும், மற்றொரு பகுதியில் மாதக்கணக்கில் தண்ணீர் வரவில்லை என்றும் பொது மக்கள் குற்றஞ்சாட்டினர். தண்ணீர் வராத பகுதிகளுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வழங்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் உறுதி யளித்தனர்.

4 நாளில் ஆபத்து

நகராட்சி பொறியாளர் கிறிஸ்டோபர் கூறும்போது, ``கடைய நல்லூர் நகராட்சிக்கு தாமிரபரணி யிலிருந்து 35 லட்சம் லிட்டரும், கருப் பாநதியிலிருந்து 35 லட்சம் லிட்டரும் தண்ணீர் கிடைக்க வேண்டும். இது முற்றாக குறைந்து விட்டதால், இன்னும் நான்கு நாட்களில் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் தாமிரபரணி தண்ணீர் முற்றிலுமாக நின்று போகும் நிலையுள்ளது. இனி, லாரிகள் மூலம் மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படும். எனவே, பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x