Published : 22 Apr 2014 10:00 AM
Last Updated : 22 Apr 2014 10:00 AM

தோல்வி பயத்தில்தான் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல்: பிரேமலதா விஜயகாந்த்

தோல்வி பயத்தில்தான் முதல்வர் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா தெரிவித்தார்.

மதுரை தொகுதி தேமுதிக வேட்பாளர் சிவமுத்துகுமாரை ஆதரித்து, ஜெய்ஹிந்த்புரத்தில் திங்கள்கிழமை இரவு பிரேமலதா பேசியது:

முதல்வர் ஜெயலலிதா சென்னையில், தனக்கு காய்ச்சல் வந்துள்ளதால் மாத்திரை போட்டுக் கொண்டு பேசுவதாகக் கூறியுள்ளார். இதன்மூலம், மக்களிடம் அனுதாபம் பெற முயற்சிக்கிறார். திமுக தலைவர் கருணாநிதியும் இதுதான் தனது கடைசி தேர்தல் எனக் கூறினார். அவர் கடந்த 12 ஆண்டுகளாக, இதுபோலத்தான் கூறி வருகிறார். இப்படியெல்லாம் பேசி அனுதாப ஓட்டுகளைப் பெற ஜெயலலிதாவும், கருணாநிதியும் முயற்சிக்கின்றனர்.

ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் ஏன் வந்தது தெரியுமா? பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன் பிரதமர் என்றனர். அதன்பின் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிப்போம் என்றனர். தற்போது அதுவும் இல்லை. காரணம், நாடு முழுவதும் மக்களின் அமோக ஆதரவு கிடைத்துள்ளதால் 320 இடங்களில் வெற்றி பெற்று மோடி பிரதமர் ஆவது உறுதியாகி விட்டது. இதனால் ஏற்பட்ட தோல்வி பயத்தில்தான் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் வந்துள்ளது.

தேசத்தின் பாதுகாப்பை உறுதிபடுத்த ஜெயலலிதா பிரதமராக வர வேண்டும் என இங்குள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். தமிழக மக்களுக்கே முழுமையான பாதுகாப்பு கொடுக்க முடியாத அவரால், தேசம் முழுவதற்கும் எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும்?

இங்குள்ள மக்கள் தங்களுக்குப் பட்டா வழங்க வேண்டும் என அதிமுக அரசிடம் கேட்டு வந்தனர். அவர்களுக்கு பட்டா வழங்குவதற்கு பதில், ரூ. 200 பேட்டா கொடுத்து ஓட்டுகளைப் பெற முயற்சிக்கின்றனர். ரூ. 200 கொடுத்து மக்களை ஏமாற்ற நினைக்கும் திமுக, அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். எல்லா வளங்களும் இருந்தும் தமிழகம் முன்னேற்றம் அடையாததற்கு காரணம் அதிமுக, திமுக அரசுகளின் லஞ்சம், ஊழல்தான்.

இதனால்தான் ஓட்டு கேட்டுப் போகும் அதிமுகவினரை தமிழகம் முழுவதும் மக்கள் விரட்டுகின்றனர். தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.அதைத்தொடர்ந்து அரசமரம் பிள்ளையார் கோயில் உள்ளிட்ட இடங்களில் அவர் வாக்கு சேகரித்தார். வேட்பாளர் சிவமுத்துகுமார் உடன் சென்றார்.

வெற்றிக்காக சுவாமி தரிசனம்

மதுரை தொகுதி பிரச்சாரத்துக்காக வந்திருந்த பிரேமலதா திங்கள்கிழமை காலை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். அப்போது அவர் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெற அம்மனிடம் வேண்டி கொண்டதாக தேமுதிகவினர் தெரிவித்தனர்.

அப்போது சுதீசின் மனைவி, திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.டி.ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மு.க. அழகிரியை நீக்கியது ஏன்?

அரசமரம் பிள்ளையார் கோயில் அருகே பிரேமலதா பேசுகையில், 2 ஜி ஊழல் மூலம் ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் செய்த ஆ.ராசாவுக்கு இந்த தேர்தலில் போட்டியிட திமுக மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், மு.க அழகிரிக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என்பதை தெரிவிக்க வேண்டும். அழகிரி சொல்வது போல, யாருடைய கட்டுப்பாட்டிலோ கருணாநிதி சிக்கிக் கொண்டுள்ளார் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.

திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் அழகிரியை நீக்கக் காரணம் என்ன? அழகிரி அப்படி என்ன தவறு செய்துவிட்டார்? மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ராசாவையும், கனிமொழியையும் கட்சியை விட்டு நீக்காதது ஏன்? குடும்பத்துக்குள் நடந்ததை வெளியில் கொண்டு வந்தது ஏன்? என்பதை பற்றியெல்லாம் கருணாநிதி பதில் சொல்ல வேண்டும். அப்பா என்பவர் அனைத்து குழந்தைகளுக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x