Published : 22 Jan 2014 09:20 AM
Last Updated : 22 Jan 2014 09:20 AM

இமாம்அலி கூட்டாளி வெட்டிக் கொலை- பட்டபகலில் மதுரையில் பயங்கரம்

மதுரையில் பட்டப்பகலில் தீவிரவாதி இமாம்அலியின் கூட்டாளி மன்னர் மைதீன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

மதுரை நெல்பேட்டை கரீம்ஷா பள்ளிவாசல் 4-வது தெருவைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் மகன் மன்னர் மைதீன் (35). ரவுடி எனக் கூறப்படும் இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். 2005-ம்

ஆண்டு மதுரையில் நடைபெற்ற இந்து மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் காளிதாஸ், பூசாரி கங்காதரன் கொலை வழக்குகள் உள்பட 12 வழக்குகள் இவர் மீது இருந்தன. இவற்றில் காளிதாஸ், கங்காதரன் கொலை வழக்குகளில் மன்னர் மைதீன் விடுதலை செய்யப்பட்டார். சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதற்கிடையே சண்டைக்கிடா வளர்ப்பில் ஆர்வமுள்ள இவர், நெல்பேட்டையிலிருந்து ஓபுளா படித்துறை செல்லும் வழியில் மரத்தடியில் கட்டப்பட்டிருந்த தனது ஆட்டுக்கிடாவுக்கு புல் போடுவதற்காக செவ்வாய்க்கிழமை காலை அங்கு சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த மூன்று பேர், மன்னர் மைதீனை அரிவாளால் வெட்டி, கத்தியால் குத்தினர். இதில் அவர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மன்னர் மைதீனை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மன்னர் மைதீன் இறந்தார். இதுபற்றி தகவலறிந்த சட்டம், ஒழுங்கு உதவி ஆணையர் துரைசாமி, விளக்குத்தூண் ஆய்வாளர் ஜெயக்குமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கொலை நடந்த இடத்தில் தனியார் டிரான்ஸ்போர்ட் கம்பெனியின் 2 கண்காணிப்பு கேமராக்கள் இருந்தன. அதில் கொலை சம்பவம் மற்றும் கொலையாளிகள் உருவம் முழுமையாகப் பதிவாகியிருக்க வாய்ப்பு இருப்பதால், அதன் வீடியோ பதிவுகளைப் பெற்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அந்த இடத்தில் கொலையை நேரில் பார்த்த சிலரிடமும் விசாரிக்கின்றனர். இவற்றில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் முன்விரோதம் காரணமாக மன்னர் மைதீனை அவரது கூட்டாளிகளே கொலை செய்திருக்கலாம் என போலீஸாருக்குத் தெரியவந்தது.

இதுபற்றி போலீஸார் கூறியதாவது:

கொலை செய்யப்பட்ட மன்னர் மைதீனுக்கு, தீவிரவாதி இமாம்அலியுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. ஆனால் அவருடன் சேர்ந்து எந்த குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இப்ராகிம்ஷா என்பவரும் சேர்ந்து சில குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒருசில வழக்குகளில் மன்னர் மைதீன் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் இப்ராகிம்ஷாவுக்கு நீதிமன்றம் தண்டனை அளித்தது. இதனால் மன்னர் மைதீன் தனக்கு எதிராக மறைமுகமாகச் செயல்பட்டதாக இப்ராகிம்ஷா கருதினார்.

தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்த இப்ராகிம்ஷா சிறையிலிருந்து வெளியே வந்து பிரியாணி கடை நடத்தி வருகிறார். அவரது வளர்ச்சி மன்னர் மைதீனுக்குப் பிடிக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2012-ம் ஆண்டு இப்ராகிம்ஷாவின் சகோதரி மகன் சதாம் உசேன் என்பவரை மன்னர் மைதீன் உள்ளிட்டோர் கொலை செய்ய முயன்றனர். ஆனால் அவர் படுகாயத்துடன் தப்பிவிட்டார். எனவே அதற்குப் பழிவாங்கும் நோக்கில் தற்போது மன்னர் மைதீன் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

எனவே இவ்வழக்கு தொடர்பாக இப்ராகிம்ஷா உள்பட 3 பேரைத் தேடி வருகிறோம். இவர்களில் இப்ராகிம்ஷா மீது கொலை, கொலை முயற்சி உள்பட சுமார் 15 வழக்குகள் உள்ளன. கொலையான மன்னர் மைதீன் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநில இளைஞர் அணியின் துணைத் தலைவராகவும் இருந்து வந்தார்.

தீவிரவாதியுடன் தொடர்பில்லை

மன்னர் மைதீன் உறவினர்கள் கூறுகையில், மன்னர்மைதீன் மீது பதிவாகியிருந்த வழக்குகளில் பெரும்பாலானவை பொய்யானவை. அவருக்கும் தீவிரவாதி இமாம்அலிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x