

கோவையில் விபத்துகளைக் கட்டுப்படுத்த மியூசிக், ஏர் ஹாரன்களைப் பறிமுதல் செய்யும் திட்டமும், முக்கியச் சந்திப்புகளில் விபத்துகளின் எண்ணிக்கையை அறிவிப்பாக வைக்கும் திட்டமும் தொடங்கப்பட உள்ளதாக போக்குவரத்து போலீஸார் தெரிவிக்கின்றனர்.
கோவையில் நாளுக்கு நாள் பெருகி வரும் வாகன எண்ணிக்கையினால் நகரில் போக்குவரத்து நெரிசல் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கின்றன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, அதிக வேகத்தில் செல்வதுபோன்ற காரணங்கள் விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதைத் தடுக்க கோவை மாநகரப் போக்குவரத்து பிரிவு போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி தீவிர வாகன சோதனை நடத்துவது, விபத்து அதிகம் நடக்கும் இடங்களில் சாலையில் குறியீடு அமைப்பது, அனைத்து சிக்னல்களிலும் சிசிடிவி கண்காணிப்பை பலப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விபத்துகளை குறைக்க போலீஸார் முயற்சித்து வருகின்றனர்.
ஆனால், சமீப காலமாக இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மத்தியில் அதிவேக இருசக்கர வாகனங்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதால் போலீஸாரின் நடவடிக்கையை மீறி விபத்துகளும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. கோடை விடுமுறை நெருங்குவதால், இளைஞர்களிடையே வாகனப் பயன்பாடும் அதனால் விபத்துகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதைத் தடுக்க போலீஸார் முன்கூட்டியே நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டனர்.
முதற்கட்டமாக, மற்ற வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் அச்சுறுத்தும் மியூசிக் ஹாரன், ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. மார்ச் 1-ம் தேதியிலிருந்து நடைபெற்ற வாகனத் தணிக்கையில் இருசக்கர வாகனங்களில் இருந்து மிசியூக் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டு 150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, சாலைகளில் விபத்துக் குறியீடுகள் அமைத்தது போலவே, முக்கியச் சாலைகளில் மாநகர விபத்து விவரங்களை தகவல் பலகைகளில் வைக்கவும், அதன் மூலம் விபத்து எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
போக்குவரத்து போலீஸாரிடம் கேட்டபோது, ‘கடந்த ஆண்டு மட்டும் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் அபராதமாக பல கோடி ரூபாய் வசூலானது. அதில் ஹெல்மெட்டுக்கான அபராதம் மட்டுமே சுமார் ரூ.2 கோடி வரை வந்தது. அபராதம் வசூலிப்பது போலீஸாரின் நோக்கமல்ல. ஆனால் பல வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்துவதை பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடுகிறார்கள்.
போக்குவரத்து விதிமுறைகள் குறித்து கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டாலே பாதிக்கும் அதிகமாக விபத்து எண்ணிக்கை குறைந்துவிடும்.
300 பேர் உயிரிழப்பு
கோவை மாநகரில் கடந்த ஆண்டு 285 விபத்துகளில் 300 பேர் உயிரிழந்துள்ளனர். எங்கெல்லாம் அதிகளவில் விபத்துகள் நடக்கின்றன என்பதை அறிந்து, சாலையில் மஞ்சள் நிற எச்சரிக்கைக் குறியீடு வரையப்பட்டது. இதனால் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையால் நடப்பு ஆண்டில் விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும், இந்த நடவடிக்கையைத் தீவிரப்படுத்த, நகரின் விபத்து எண்ணிக்கை, பலியானோர் எண்ணிக்கை விவரங்களை ஒவ்வொரு சாலையிலும் அறிவிப்புப் பலகைபோல வைக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. நடப்பு போக்குவரத்து பாதுகாப்பு சூழலை நகரின் அனைத்து இடங்களிலும் தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும். அதேசமயம் விபத்துகளின் எண்ணிக்கை உயர்வு, வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கையாகவும் இருக்கும்’ என்கின்றனர்.
அதிகபட்ச அபராதம்
கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சரவணன் கூறும்போது, ‘மருத்துவ, கல்வி நகரமான கோவையில் ஒலி மாசுபாடு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்தினாலே பெருமளவு விபத்துகள் குறையும். மார்ச் 1-ம் தேதி முதல் இருசக்கர வாகனங்களில் பயன்படுத்தப்படும் மியூசிக் ஹாரன்களை அகற்றி அபராதம் விதித்து வருகிறோம்.
அடுத்ததாக, வட்டார போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உதவியுடன் ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்யும் பணி தொடங்கும். அதிகபட்ச அபராதமும் விதிக்கப்படும். கோடை விடுமுறையில் இருசக்கர வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்கும். எனவே இருசக்கர வாகனப் புகைப் போக்கி வடிவங்களை மாற்றுவது உள்ளிட்ட விதிமீறல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்க நிர்வாகிகளிடமும் இதுகுறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.