

தமிழக அரசின் 2017-18ம் ஆண்டுக் கான பட்ஜெட்டை நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், சட்டப்பேரவை யில் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள், வரிச் சலுகைகள் இல்லை.
ஒரு லட்சம் பெண்கள் ஸ்கூட்டர் வாங்க ரூ.200 கோடி மானியம், விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி பயிர்க்கடன், சிறப்புக் காவல் இளைஞர் படைக்கு 10,500 பேர் தேர்வு என பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. காலை 10.30 மணிக்கு நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். காலை 10.32 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய அமைச்சர், பகல் 1.11 மணிக்கு நிறைவு செய்தார். முன்னதாக காலை 10 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் பட்ஜெட் பிரதியை வைத்து வணங்கினார்.
நெருக்கடியான சூழ்நிலை யில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள் ளதாகவும், உறுதியற்ற நிலையில் உள்நாட்டு பொருளாதாரம் உள்ள சூழலில் தமிழகத்தின் பொருளாதார நிலையை மீட்டெடுக்கும் கடினமான முயற்சிகளை அதிமுக அரசு மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பட்ஜெட் உரையில் அமைச்சர் கூறியதாவது:
தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 2016-17ல் 7.94 சதவீதமாகவும், 2017-18ல் 9 சதவீதமாகவும் இருக்கும். சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ள தால் மாநில சரக்கு, சேவை வரி (எஸ்ஜிஎஸ்டி) சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவுள்ளது.
தமிழக அரசின் மொத்த வருவாய் ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 363 கோடி, மொத்த செலவுகள் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்து 293 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வருவாய் பற்றாக்குறை ரூ.15,930 கோடி, நிதிப் பற்றாக்குறை ரூ.41,977 கோடியாக இருக்கும். 2018 மார்ச் இறுதியில் தமிழக அரசின் நிகர கடன் நிலுவை ரூ.3 லட்சத்து 14 ஆயிரத்து 366 கோடியாக இருக்கும். 2017-18ம் ஆண்டில் ரூ.41,965 கோடி மட்டுமே கடன் பெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வரவுள்ளதால் புதிய வரிகள், வரிச் சலுகைகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
உழைக்கும் பெண்கள் ஒரு லட்சம் பேருக்கு ஸ்கூட்டர் வாங்க தலா ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உள் ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தேர்தலை நடத்தி முடிக்க பட்ஜெட்டில் ரூ.174 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித் தார்.
பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:
* தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்கு ரூ.2 ஆயிரம் கோடி.
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு ரூ.1,000 கோடி.
* தமிழ்நாடு கிராமப்புற புத்தாக் கத் திட்டத்துக்கு ரூ.1,000 கோடி.
* வறுமை ஒழிப்புத் திட்டங் களுக்கு ரூ.741 கோடியே 12 லட்சம்.
* ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்க ரூ.150 கோடி.
* தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கு 10,500 இளைஞர்கள் தேர்வு.
* உழவர் பாதுகாப்பு திட்டத் தின் கீழ், இயற்கை மரணம் அடையும் விவசாயிகளின் குடும்பத்தினருக் கான நிவாரணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்வு.
* 2017-18ல் 1 கோடி மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம்.
* பயிர்க் காப்பீடு மானியத்துக்கு ரூ.522 கோடியே 70 லட்சம்.
* 1 லட்சம் ஏக்கரில் நுண்ணீர்ப் பாசனத்துக்கு ரூ.369 கோடி.
* 2 ஆயிரம் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் தொடங்க ரூ.100 கோடி.
* 12 ஆயிரம் கறவைப் பசுக்கள், 6 லட்சம் ஆடுகள் வழங்க ரூ.182 கோடி.
* நாட்டு மரபின மாடுகளைப் பாதுகாக்க கூடுதல் நிதி.
* மதுரையில் ரூ.40 கோடியில் ஆவின் பதப்படுத்தும் ஆலை.
* கல்லூரி, பல்கலைக்கழகங் களில் 200 ஆவின் பாலகங்கள்.
* மீன்பிடி தடை காலங்களில் வழங்கப்படும் உதவித் தொகை ரூ.4,500 ஆக உயர்வு
* கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி பயிர்க்கடன்.
* குடிமராமத்து திட்டத்துக்கு ரூ.300 கோடி.
* நீர்வள, நிலவள திட்டத்தின் 2-ம் கட்டப் பணிகளுக்கு ரூ.814 கோடி.
* அணைகள் புனரமைப்பு, மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.354 கோடி.
* தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டத்தின் 3-வது, 4-வது கட்டப் பணிகளுக்கு ரூ.300 கோடி.
* அத்திக்கடவு - அவிநாசி பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல், குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு ரூ.250 கோடி.
* எண்ணூர் துறைமுகம் - தச்சூர் வடக்கு துறைமுக சாலை திட்டத்துக்கு ரூ.951 கோடி.
* உதய் திட்டத்தில் இணைந்த தால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,335 கோடி சேமிப்பு.
* மின்சார மானியம் ரூ.8,538 கோடி.
* 107.5 கி.மீட்டரில் 3 வழித் தடங்களில் மெட்ரோ ரயில் 2-ம் கட்டப் பணிகளை செயல்படுத்த திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.
* நடப்பு ஆண்டில் 1,000 கிராமக் கோயில்கள் புதுப்பிக்கப்படும்.
* தொழில் தொடங்க இணையதளம் மூலம் அனுமதி.
* உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த ரூ.75 கோடி.
* விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்க ரூ.490 கோடி.
* பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டத்துக்கு ரூ.758 கோடி.
* தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.800 கோடி.
* ஊரக தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.980 கோடி.
* நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.600 கோடி.
* ரூ.3,502 கோடியே 39 லட்சத்தில் 1 லட்சத்து 96 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்.
* ரூ.2 ஆயிரம் கோடியில் 20 ஆயிரம் குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டப்படும்.
*மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்கு ரூ.1,348 கோடி.
* சமூகப் பாதுகாப்பு திட்டங் களுக்கு ரூ.3,790 கோடி.