Published : 04 Feb 2017 04:40 PM
Last Updated : 04 Feb 2017 04:40 PM

இரண்டு நாட்டு மீனவப் பிரநிதிகளும் பேசி மீனவப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்: ப.சிதம்பரம் நம்பிக்கை

இந்திய-இலங்கை இரு நாட்டு மீனவப் பிரநிதிகளும் பேசி தீர்வு காண்பதன் மூலம் மீனவப் பிரச்சினைக்கு தீர்க்க முடியும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ராமேசுவரம் அருகே பாம்பனில் நேசக்கரங்கள் அறக்கட்டளையின் சார்பில் மீனவர்களுக்கான பிரத்யேக சமுதாய வானொலி நிலையம் கடல் ஓசை என்ற பெயரில் அமைக்கப்பட்டு இதற்காக ராமேசுவரம் தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியை சார்ந்த இளைஞர்களையே வானொலி வல்லுநர்களாக அகில இந்திய வானொலி வல்லுநர்களால் பயிற்சி அளிக்கப்பட்டு கடந்த சுதந்திர தினத்திலிருந்து சோதனை ஒலிபரப்பு செய்து வந்தது.

சனிக்கிழமை பாம்பனில் நேசக்கரங்கள் அறக்கட்டளையின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில் கடல் ஓசை வானொலியின் அதிகாரப்பூர்வமான ஒலிபரப்பு துவக்கம் நடைபெற்றது. இதனை முன்னாள் உள்துறை மற்றும் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கார்த்தி ப.சிதம்பரம், இலங்கை வானொலியின் முன்னோடி அறிவிப்பாளர் பி.ஹெச். அப்துல் ஹமீது, பேரா. கு.ஞானசம்பந்தன், இரா. குறிஞ்சிவேந்தன், சுவாமி பிரணவானந்த, செல்லத்துறை அப்துல்லா, அருட் சகோ. ஜான் பெர்னாண்டோ, கர்னல் எட்வின் ஜேசுதாஸ், பசுமை அறக்கட்டளை நிறுவனர் பால் பாஸ்கர், மண்டபம் கடற்படை கமாண்டோ விஜய் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் உள்துறை மற்றும் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது,

இலங்கை உள்நாட்டுப் பிரச்சினை 35 ஆண்டு காலமாக நீடித்து தற்போது சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் இணைக்க இலங்கை அதிபர் சிரிசேனாவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் முயற்சி எடுத்து வருகிறார்கள். இதற்காக அவர்கள் இருவரையும் வாழ்த்த வேண்டும். இலங்கையில் சிங்களர்களும், தமிழர்களும் ஒரு தாய் பிள்ளைகளாக வாழ வேண்டும் என்பது தான் நமது ஆசை.

இந்தியாவிலும் மீனவர்கள் இருக்கிறார்கள். இலங்கையிலும் மீனவர்களும் இருக்கிறார்கள். இவர்களை கடல் தான் பிரித்திருக்கிறது. இடையில் கடல் இல்லை என்றால் நிலத்தினால் ஒன்றாக இருந்திருப்பார்கள். இரு நாட்டு மீனவர்களுக்கும் பொதுவான மொழி தமிழ் தான். ஆனாலும் இரு தரப்புக்கும் இடையே பகை வளர்ந்து வருவது நமக்கெல்லாம் வருத்தமே. இந்த பகை வளரக் கூடாது. இந்த பகையை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இரண்டு நாட்டு மீனவர்களும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கடந்த காங்கிரஸ் ஆட்சியிலே இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையே மீனவப் பேச்சு வார்த்தை துவக்கப்பட்டது.

தற்போது இரண்டு நாட்டு அரசுகளும் மீனவப் பிரச்சினையை பேசி தீர்ப்பதை விட, இரண்டு நாட்டு மீனவப் பிரநிதிகளும் பேசி தீர்வு காண்பதன் மூலமே மீனவப் பிரச்சினையை தீர்க்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இரு நாட்டு மீனவப் பிரநிதிகளும் பேசி மீனவ பிரச்சினையை தீர்க்க தமிழக மற்றும் மத்திய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும், என்றார்.

இந்த நிகழ்ச்சியில் திரளான மீனவ மக்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x