

ஆண்டுதோறும் 10 ஆயிரம் இளை ஞர்களுக்கு ஆட்டோமொபைல், விமான தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிப்பதற்காக தமிழகத்தில் ரூ.200 கோடி செலவில் புதிய தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட உள்ளது. தமிழக அரசுடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் ஜாம்கண்டி கூறியதாவது:
தமிழகத்தில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் ரூ.200 கோடி செலவில் புதிய தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்குத் தேவையான நிலம் தமிழக அரசிடமிருந்து பெறப்படும். இதற்காக ஸ்ரீபெரும்புதூர், கோவை உள்பட 3 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த தொழில்நுட்ப மையத்தில் ஆட்டோமொபைல், விமான தொழில்நுட்பம் (ஏரோஸ்பேஸ்) குறித்து பயிற்சி அளிக்கப்படும். இந்த மையம் மூலம் ஆண்டுக்கு 10 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும். பள்ளியில் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், ஐடிஐ, பாலி டெக்னிக் முடித்தவர்கள், பட்டதாரி கள் என அனைத்து தரப்பின ரும் பயிற்சி பெறலாம். அவர்களுக்கு 100 சதவீத வேலை வாய்ப்பு உறுதியாக கிடைக்கும்.
தொழில்பயிற்சிகள் மட்டுமின்றி, எம்.டெக். உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளும் இந்த மையத்தில் வழங்கப்படும். இந்த திட்டத்துக்கான ஆரம்ப கட்டப் பணிகளை டிசம்பர் மாதத்துக்குள் முடித்துவிட்டு 3 ஆண்டுகளில் மையத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு ஜாம்கண்டி கூறினார்.
முதல் தொழில்நுட்ப மையம் பெங்களூரில் அமைக்கப்படுகிறது. அங்கு விமான தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகளை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அடுத்ததாக, புதுச்சேரியிலும் 3-வதாக தமிழகத்திலும் தொழில்நுட்ப மையம் ஏற்படுத்தப்படும்.