தனியார் துறையில் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற குரல் கொடுக்க வேண்டும்: கருணாநிதி

தனியார் துறையில் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற குரல் கொடுக்க வேண்டும்: கருணாநிதி
Updated on
2 min read

தனியார் துறை வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்துவதற்கு சமூக நீதி ஆர்வலர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''திமுகவின் 2014ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில், பக்கம் 17இல், வேலைவாய்ப்பில் தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு என்ற தலைப்பில், ''பொதுத் துறை நிறுவனங்கள், படிப்படியாகத் தனியார் மயமாக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, இனிமேல் கட்டாயம் தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட வேண்டும். அப்படி வழங்குவது மட்டுமே சமூக நீதியின் நியாயமான, முழுமையான வெளிப்பாடாகும். இத்தகைய இட ஒதுக்கீடுகள் நீண்ட காலமாக அமெரிக்க ஐக்கியக் குடியரசில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டு முறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென மத்திய அரசை திமுக வலியுறுத்தும்'' என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தோம்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த இந்த நோக்கத்திற்கு மேலும் ஒளியூட்டும் வகையில், இன்றைய நாளேட்டில், தலித்துகளுக்கு தனியார் துறையில் இட ஒதுக்கீடு? என்ற தலைப்பில் வந்துள்ள செய்தியில், மத்திய சமூக நீதித் துறை அமைச்சக அதிகாரி ஒருவர், ''தலித் சமூகத்தினருக்காக பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றுமாறு சமூக நீதித் துறை அமைச்சகத்திற்கு பிரதமர் அலுவலகம் அண்மையில் உத்தரவிட்டது. தலித்துகளுக்கு தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்குதல், பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு அளித்தல், பெரிய அளவில் தலித் மாநாட்டை நடத்துதல், தலித் எழுத்தாளர்கள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தல் ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

இந்தத் திட்டத்திற்கான செயல் வடிவத்தினை பிரத்யேகமாக பிரதமர் அலுவலகம் தயாரித்துள்ளது. பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்டோரின் ஆலோசனையின்படி இந்தச் செயல்வடிவம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பு மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் தவார் சந்த் கெலோட்டிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.

தலித்துகளுக்கு தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துமாறும் பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்தத் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய உயர்நிலைக் குழு விரைவில் அமைக்கப்படவுள்ளது'' என்று விரிவாக மத்திய அரசு அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தலித் பிரிவினர், சாதி - மதப் பிளவு எண்ணம் கொண்ட சில பாஜகவினராலும், ஆர்.எஸ்.எஸ். காரர்களாலும் தாக்கப்பட்டு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அண்மையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வரவிருக்கும் சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல்களை மனதிலே கொண்டோ என்னவோ, மத்திய பாஜக அரசு தலித் மக்களைச் சரிக்கட்டும் வகையில் இந்த அளவுக்குப் பெரிய அறிவிப்பினைச் செய்ய முன் வந்துள்ளது எனக் கருத நேரிட்டாலும்; நேர்மையோடும் உண்மையோடும், தலித் மக்களைக் கைதூக்கி விட வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசின் அறிவிப்பு அமைந்திருக்குமாயின், வரவேற்கத்தக்கதே என்பதில் இரு வேறு எண்ணங்களுக்கு இடமில்லை.

அது மாத்திரமல்ல; தாழ்த்தப்பட்டோருக்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்ற தலைப்பிட்டு, 'தி இந்து' ஆங்கில நாளேட்டில் ''தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்திடம் மாநில அரசுகள் கொடுத்த அறிக்கைகளின்படி, தாழ்த்தப்பட்டோருக்கான துணைத் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, தாழ்த்தப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் இருந்தாலும், உள்ளபடியே அந்த நிதியில் தாழ்த்தப்பட்டோருக்காகச் செலவு செய்யப்பட்டிருக்கும் நிதியின் அளவைப் பார்த்தால், மேற்கு வங்கம், கர்நாடகம், மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களைத் தவிர. மற்ற மாநிலங்கள் அனைத்திலும் இரண்டு சத விகிதம் முதல் எட்டு சதவிகிதம் வரை தான் என்பது கவலைக்குரியதாகும்'' என்று கூறப்பட்டுள்ளது.

தலித் மக்களுக்கு பாஜக அரசின் மீதான அதிருப்தியைக் குறைக்கும் வகையில், மத்திய அரசு தலித் மக்களுக்காகப் பல சலுகைகளைச் செய்ய முன் வருகிறது என்பதைப் போல, இப்போது தலித்துகளுக்கு தனியார் துறையில் இட ஒதுக்கீட்டினைக் கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளதாகச் செய்திகள் வந்திருக்கின்றன.

தனியார் துறையில் தலித்துகளுக்கு இட ஒதுக்கீட்டினைக் கொண்டு வர மோடி தலைமையிலான மத்திய அரசு முன் முயற்சி மேற்கொண்டுள்ள இவ்வேளையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்க்கு கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் இருந்த 16 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பதை 1971ஆம் ஆண்டில் 18 விழுக்காடாக உயர்த்தியதும்; பின்னர் 1990இல் பொது ஒதுக்கீட்டிலிருந்து ஒரு விழுக்காடு எடுத்து - பழங்குடியினருக்குத் தனியே ஒரு விழுக்காடு வழங்கியதுடன், ஆதி திராவிடர்களுக்கு மட்டும் 18 விழுக்காடு இட ஒதுக்கீடு முழுமையாக கிடைக்க வழி செய்ததும்; ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்படும் 18 சத விகித இட ஒதுக்கீட்டிலிருந்து அருந்ததியர்களுக்கு 3 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியதும் திமுக ஆட்சியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இட ஒதுக்கீடு செய்யப்பட்டு நிரப்பப் படாமல் இருக்கும் காலிப் பணியிடங்களை இட ஒதுக்கீட்டிலிருந்து நீக்கும் முறையை 1989இல் தடை செய்ததும்; ஆதி திராவிடர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் அவர்களுக்கே என உறுதிப்படுத்தப்பட்டு, அதன் பயனாகப் பின்னடைவுப் பணி இடங்கள் கணக்கிடப்பட்டு, ஒவ்வொரு துறையிலும் ஆதி திராவிடர்களை நியமனம் செய்யும் முறையை அறிமுகப்படுத்தியதும், திமுக ஆட்சியில் தான் என்பதை நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

தனியார் துறையில் இட ஒதுக்கீடு எனும் சிறப்பு மிக்க சமூக நீதிக் கருத்தாக்கத்தினை, அறிவிப்போடு நிறுத்தி விடாமல், தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று, முழுமையான அளவில் நிறைவேற்றுவதற்கான செயல் திட்டங்களை வகுத்தளித்திடவும், அதற்கு இந்தியாவிலுள்ள சமூக நீதி ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து குரல் கொடுத்திடவும் வேண்டும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in