Published : 13 Jan 2017 01:59 PM
Last Updated : 13 Jan 2017 01:59 PM

வரத்து குறைந்து, விலை உயர்ந்தாலும் பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டியது

நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களின் சந்தைகளில் கடும் கூட்டம்

பொங்கல் பண்டிகைக்காக கரும்பு, மஞ்சள் குலை, மலர்கள் மற்றும் காய்கறிகள் வாங்க சந்தைகளில் மக்கள் கூட்டம் நேற்று அதிகம் காணப்பட்டது. மழையின்றி வறட்சி காரணமாக விளைச்சல் குறைந்து, வரத்தும் குறைந்த போதும், விற்பனை குறையவில்லை.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாளான இப்பண்டிகையின் போது, இல்லங்களில் அதிகாலையில் புதுப்பானையில் புத்தரிசி பொங்கல் வைத்து மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பொருட்களை, சூரியனுக்கு படைத்து வழிபடுவது தமிழர்களின் வழக்கம்.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் கடுமையான வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்கறி, கரும்பு, மஞ்சள் குலை போன்றவை வரத்து குறைந்து, விலை உயர்ந்துள்ளது. எனினும், பொங்கல் பண்டிகைக்கு ஒரு நாள் மட்டுமே உள்ளதால், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு சந்தைகளிலும் பொங்கல் பொருட்கள், காய்கறிகள் விற்பனை நேற்று களைகட்டியது. எங்கு திரும்பினாலும், மக்கள் கூட்டம் அலைமோதியது.

1 முருங்கைக்காய் ரூ. 40

திருநெல்வேலி டவுன் மற்றும் நாகர்கோவில் `அப்டா’சந்தையில் காய்கறிகள் விலை நேற்றைய விவரம்: முருங்கைக்காய் கிலோ 120 ரூபாயாக உயர்ந்துள்ளது. வெண்டைக்காய் கிலோ ரூ. 60, பீன்ஸ் 50, தடியங்காய் 15, முட்டைக்கோஸ் 12, இஞ்சி 50, பச்சை மிளகாய் 70, வழுதலங்காய் 50, தக்காளி 15, கேரட் 30, உருளைக்கிழங்கு 25, பல்லாரி வெங்காயம் 20, சின்ன வெங்காயம் 40, கத்தரிக்காய் 60, வெள்ளரிக்காய் 50, பூசணிக்காய் 20, சேனைக்கிழங்கு 35, புடலங்காய் 50, வாழைக்காய் ஒன்று 8, கறிவேப்பிலை 30, புதினா 50 மற்றும் மல்லிக்கீரை ரூ. 60 விலைக்கு விற்கப்பட்டது.

தூத்துக்குடி சந்தைக்கு காய்கறிகள் வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதால், அனைத்து காய்கறிகளும் கிலோ ரூ. 20 முதல் ரூ.60-க்குள் விற்கப்பட்டன. ஆனால், முருங்கைக்காய் ஒன்று ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது.

(தூத்துக்குடியில் சாலையோரத்தில் மண் பானைகள் மற்றும் அடுப்புகள் குவித்து வைத்து விற்கப்பட்டன.)

கிழங்கு வகைகள்

பாளையங்கோட்டை சந்தையில் கிழங்கு வகைகளான சேனை கிலோ - ரூ.40, சிறுகிழங்கு- 60, மரவள்ளி- 60, பிடிகிழங்கு- 60, சேம்பங் கிழங்கு- 50, கருணைக்கிழங்கு- 30, உருளைக்கிழங்கு ரூ.30-க்கு விற்கப்பட்டது. கத்தரிக்காய் கிலோ ரூ.100-க்கு விற்பனையானது.

வாழைத்தார்

தூத்துக்குடி மாவட்டத்தில் வாழை அதிகம் உற்பத்தியாகும் வைகுண்டம், ஏரல், செய்துங்கநல்லூர், சாயர்புரம், கருங்குளம் பகுதிகளில் இருந்து வாழைத்தார்கள், தூத்துக்குடி காமராஜ் காய்கறி சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளன. இங்கிருந்து பழனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தாராபுரம், நிலக்கோட்டை, வத்தலகுண்டு, ஆண்டிப் பட்டி, உசிலம்பட்டி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அவை விற்பனைக்கு அனுப்பப்பட்டன.

இரு மடங்கு உயர்வு

வறட்சி காரணமாக வாழைத்தார் விலை கடந்த ஆண்டை விட இரு மடங்கு உயர்ந்து காணப்பட்டது. கடந்த ஆண்டு ரூ.350 முதல் ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்ட நாட்டு வாழைத்தார் தற்போது ரூ.700 முதல் ரூ. 800 வரை விற்கப்பட்டது. கடந்த ஆண்டு ரூ.600-க்கு விற்ற செவ்வாழை ரூ.1,000 முதல் ரூ.1200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சக்கை ரூ.600, கதலி ரூ.350, பூலாச்செண்டு ரூ.600, பச்சை வாழை ரூ.450, கோழிக்கூடு ரூ. 600-க்கு விற்கப்பட்டது. வாழை இலை விலையும் உயர்ந்திருந்தது. 200 இலைகள் கொண்ட கட்டு ரூ.750 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்பட்டது.

( ஸ்ரீவைகுண்டம், ஏரல் பகுதியில் இருந்து தூத்துக்குடி சந்தைக்கு வந்து குவிந்த வாழைத்தார்கள், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.)

மஞ்சள் குலை வரத்து குறைவு

சேலம், ஈரோடு, திண்டுக்கல் பகுதியில் இருந்து வரும் மஞ்சள் குலைகள் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் பாதியளவே சந்தைகளுக்கு வந்துள்ளன. இவற்றின் விலையும் இரட்டிப்பாகி உள்ளது. நாகர்கோவிலில் கடந்த ஆண்டு ரூ.30-க்கு கிடைத்த மஞ்சள் குலை, ரூ. 50 ஆக உயர்ந்துள்ளது.

சாயர்புரம், செபத்தையாபுரம் பகுதிகளில் விளைந்த மஞ்சள் குலைகள் தூத்துக்குடி சந்தைக்கு வந்திருந்தன. ஒரு குலை ரூ. 20 முதல் ரூ.40 வரை விற்கப் பட்டது. திருநெல்வேலியிலும் ரூ. 25 முதல் ரூ. 40 வரை விலை கூறப்பட்டது.

பனங்கிழங்கு

திருச்செந்தூர், மணப்பாடு, உடன்குடி, வேம்பார் மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் இருந்து பனங்கிழங்குகள் தூத்துக்குடிக்கு அதிகம் கொண்டு வரப்பட்டுள்ளன. 25 எண்ணம் கொண்ட கட்டு ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டது. நெல்லையில் 15 எண்ணம் கொண்ட பனங்கிழங்கு கட்டு ரூ.65-க்கு விற்பனை செய்யப்பட்டது.

மண் அடுப்பு, பானை

கான்சாபுரத்திலிருந்து கொண்டுவரப் பட்ட பொங்கல் அடுப்புகள் பாளையங் கோட்டை ராமசாமி கோயில் திடலில் குவிக் கப்பட்டிருந்தன. பெரிய அடுப்பு ரூ.80, சிறிய அடுப்பு ரூ.70, 3 அடுப்பு கட்டிகள் ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டன.

பூக்கள் விலை உயர்வு

பாளையங்கோட்டையில், பெரிய மாலையொன்று ரூ.400 முதல் ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது. மல்லிகைப்பூ கிலோ ரூ.1200-க்கு விற்பனையானது.

சந்தைகளில் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை, திருநெல்வேலி டவுண் சந்தைகள், உழவர் சந்தைகள், வள்ளியூர், சங்கரன்கோவில், ஆலங் குளம், பாவூர்சத்திரம், தென்காசி, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கரும்பு, கிழக்கு வகைகள், மஞ்சள்குலை உள்ளிட்டவை விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்தன.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ரதவீதிகளில் தற்காலிக கடை கள் ஏராளம் தோன்றியிருந்தன. ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ்புறம், பாளையங் கோட்டை காந்திமார்க்கெட் பகுதி, மகாராஜநகர் உழவர் சந்தை பகுதிகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.

போக்குவரத்து மாற்றம்

தூத்துக்குடி காமராஜ் காய்கறி மார்க்கெட் பகுதியில் வாகன நெரிசலைத் தவிர்க்க போக்குவரத்து மாற்றப்பட் டுள்ளது. பழைய பேருந்து நிலையத் தில் இருந்து திருநெல்வேலி, திருச்செந்தூர், ஏரல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் டூவிபுரம் வழியாக திருப்பி விடப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், கோவில்பட்டி, சாத்தான்குளம், வைகுண்டம், விளாத்திகுளம், எட்டய புரம் உள்ளிட்ட பகுதிகளிலும், கன்னியா குமரி மாவட்டம், நாகர்கோவில், வடசேரி, சுசீந்திரம், பூதப்பாண்டி, தக்கலை, குழித்துறை, திங்கள்நகர் போன்ற பகுதிகளிலும் பொங்கல் பொருட்கள் குவித்து வைத்து விற்கப்பட்டன.

கரும்புக்கு தட்டுப்பாடு

தஞ்சை, மதுரை பகுதிகளில் இருந்து எந்த ஆண்டும் இல்லாத வகையில் கரும்பு வரத்து மிகவும் குறைவாகவே உள்ளது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியிலும் 15 எண்ணம் கொண்ட ஒரு கட்டு ரூ. 350 முதல் 400 வரையும், ஒரு கரும்பு ரூ.40-க்கும் விற்கப்பட்டது. பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் தேனி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லாரிகளில் கரும்பு கட்டுகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டிருக்கின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரதான சந்தைகளான ஒழுகினசேரி அப்டா மற்றும் வடசேரி கனகமூலம் சந்தைகளுக்கு சில லாரிகளில் மட்டுமே கரும்புகள் வந்திறங்கின. பாசனத் தண்ணீர் பிரச்சினையால் அவை அளவு சிறுத்து காணப்பட்டன. விலை அதிகமான போதும், இவற்றை வாங்க சிறு வியாபாரிகள் மத்தியில் கடும் போட்டி நிலவியது.

கொட்டாரத்தை அடுத்த பொட்டல்குளம் கரும்பு வியாபாரி செல்லத்துரை கூறும்போது, ``கடந்த 10 ஆண்டுகளாக கரும்பு விற்பனை செய்கிறேன். இந்த ஆண்டைப்போல தட்டுப்பாடு எப்போதும் இருந்ததில்லை. பல மொத்த வியாபாரிகளிடம் இரு நாட்களாக போராடி, மேலூரில் இருந்து தலா 15 கரும்புகள் கொண்ட 350 கட்டுகள் வாங்கி வந்துள்ளன. 4 கரும்பு கடைகள் இருந்த இடத்தில் தற்போது ஒரு கடையே உள்ளது. ஒரு கரும்பு ரூ. 40-க்கும், ஒரு கட்டு ரூ. 400-க்கும் விற்பனை செய்கிறோம்” என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x