

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெறும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று பிரதமருக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், ''கடந்த 20-ம் தேதி தான் எழுதியுள்ள கடிதத்தில் நீட் தேர்வில் இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்ற நிலை உள்ளதையும் அதன் அடிப்படையில் நீட் தேர்வில் தமிழகத்து கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படாத வண்ணம் தமிழக அரசு சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதையும் சுட்டிக்காட்டியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது இருக்கும் நடைமுறைப்படி மருத்துவ படிப்பில் இளநிலை மற்றும் முதுநிலை ஆகிய இரண்டு கட்டங்களிலும் முறையான இட ஒதுக்கீட்டு கொள்கை பின்பற்றப்படுகிறது. நீட் தேர்வு முறையினை தற்போது இருக்கும் நடைமுறையில் அமல்படுத்தினால் அது மாநிலத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நீட் விவகாரத்தில் மாநிலங்களில் நலன் பாதிக்கப்படாத வகையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை தான் கருத்தில் கொள்வதாகவும், இருப்பினும் தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டமே கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு உகந்ததாக இருக்கும் என்றும் கடிதத்தில் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.
கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்று தர தேவையான நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.