Published : 02 Jan 2014 09:35 AM
Last Updated : 02 Jan 2014 09:35 AM

சென்னை: புத்தாண்டில் பைக் விபத்துகளில் 3 மாணவர் உள்பட 6 பேர் பலி

புத்தாண்டில் சென்னையில் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 3 கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர்.

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் வழக்கமான உற் சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்வதை கொண்டாட்டம் என பல இளைஞர்கள் நினைக்கின்றனர். இப்படி பொறுப்பில்லாமல் பைக் ஓட்டிய கல்லூரி மாணவர்கள் 3 பேர், புத்தாண்டு தினத்தில் விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.

விவரம் வருமாறு

சென்னை மேற்கு சைதாப்பேட்டை சுப்பிரமணிய சாலை பகுதியில் வசித்து வருபவர் பரஞ்ஜோதி. இவரது மகன் ராம்பிரசாத் (19). பொறியியல் கல்லூரி 2-ம் ஆண்டு மாணவர். இவர் தனது நண்பருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் கிண்டி காந்தி மண்டபம் எதிரே சென்று கொண்டிருந்தார். லாரியை முந்து வதற்காக வேகமாக சென்றபோது பின் சக்கரத்தில் இடித்து இருவரும் சாலையில் விழுந்தனர். தலையில் காயம் அடைந்த ராம்பிரசாத் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னால் அமர்ந்திருந்த நண்பர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கிண்டி போக்குவரத்து போலீஸார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

குன்றத்தூர் அருகே பழந்தண்டலம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் அருண்குமார் (17). புத்தாண்டு கொண் டாட்டத்துக்கு கேக் வாங்குவதற்காக தனது 2 நண்பர்களுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் குன்றத்தூர் பேருந்து நிறுத்தத்துக்கு சென்றார். மோட்டார் சைக்கிளை அருண்குமார் ஓட்டினார். குன்றத்தூர் பிரதான சாலையில் எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அருண்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். நண்பர்கள் 2 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

கொடைக்கானலைச் சேர்ந்த பிரகாஷ் (22), சென்னையில் தங்கி பி.டெக் படித்து வருகிறார். நண்பர்களுடன் தனித்தனி மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. ஈக்காட்டுத்தாங்கல் நூறடி சாலையில் அம்பாள் கார்டன் அருகே வேகத் தடையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதால் அவர் கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து பிரகாஷ் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே பிரகாஷ் இறந்தார்.

மதுரை மாவட்டம் கே.புதூர் மகா லட்சுமி நகரைச் சேர்ந்தவர் அன்பு செல்வன் (24). இவர் சென்னை அரும் பாக்கத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். வேலப்பன்சாவடி சிக்னல் அருகே பைக்கில் வந்தபோது திடீர் பிரேக் போட்டதால் பின்னால் வந்த லாரி இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அன்பு செல்வன் இறந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

சென்னை எம்.கே.பி.நகர் 18-வது குறுக்கு சாலையை சேர்ந்தவர் ராம நாராயணசிங் (42). பேசின் பாலத்தை கடந்து எம்.கே.பி.நகரை நோக்கி சென்றார்.

அப்போது ஒரு லாரியை முந்திச் செல்ல முயன்றபோது லாரியின் சக்கரத்துக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். புளியந்தோப்பு போக்குவரத்து போலீஸார் லாரி ஓட்டுநர் முத்துவேலை கைது செய்தனர்.

சென்னை கொரட்டூர் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் தமிழ் செல்வன். இவர் மண்ணூர்பேட்டை சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். பூந்தமல்லி போக்குவரத்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x