

ஆசிரியை கம்பால் தாக்கியதில் கண் பார்வை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க பள்ளி நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாங்குநேரியைச் சேர்ந்த கே.வெங்கடேஷ்வரி, உயர் நீதிமன்ற கிளையில் 2012-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாங்குநேரியில் ஜேக்கப்பாண்டியன் நடத்தும் ரதீஷ் ஆங்கில மெட்ரிக். பள்ளியில் என் மகள் கே.பிரியதர்ஷனி எல்கேஜி படித்து வந்தாள். 1.3.2012-ல் என் மகளை ஆசிரியை பிரீட்டா கம்பால் அடித்துள்ளார். இதில் வலது கண்ணில் கம்பு குத்தியதில் காயம் ஏற்பட்டது. கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கண்ணில் குத்தியிருந்த கம்பு அகற்றப்பட்டது. இதற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன் விசாரணைக்கு வந்தது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தாக்கல் செய்த பதில் மனுவில், ஆசிரியை பிரீட்டா கையில் கம்பு வைத்திருந்துள்ளார். ஆனால், அவர் சிறுமியை அடிக்கவில்லை. வகுப்பு நேரம் முடிந்து வேனில் ஏறுவதற்காக ஓடியபோது ஆசிரியை கையில் வைத்திருந்த கம்பு அவரது கண்ணில் பட்டுள்ளது. பார்வை பாதிக்கவில்லை. இதனால் இழப்பீடு வழங்கத் தேவையில்லை எனக் கூறப்பட்டிருந்தது.
அப்போது நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த விஜயேந்திரபிதாரி (தற்போது மதுரை எஸ்பி) பதில் மனுவில், சிறுமியை ஆசிரியை அடித்துள்ளார். இதனால் சிறுமியின் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதி கே.கே.சசிதரன் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் மகளை ஆசிரியை கம்பால் தாக்கியுள்ளார். ஆசிரியையின் மனிதாபிமானமற்ற செயலால் மாணவியின் வலது கண் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பகிரங்கமாக பள்ளி நிர்வாகத்துக்கு உதவி செய்துள்ளார். சிறுமி காயமடையக் காரணமான பள்ளி நிர்வாகம் மீது அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பள்ளி நிர்வாகத்துக்கு உதவிய கல்வி அதிகாரி மீதும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி மீண்டும் பார்வை பெறுவதற்கு சாத்தியம் இல்லை. சிறுமி வலது கண் பார்வையை முழுமையாக இழந்துள்ளார். மனுதாரர் தன் மகளின் சிகிச்சைக்காக அதிக தொகை செலவிட்டுள்ளார்.
ஏற்கெனவே வட மாநிலத்தில் ஆசிரியர்களின் தவறால் நதியில் மூழ்கி 14 குழந்தைகள் இறந்தபோது தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்குப் பள்ளி நிர்வாகம் ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இத்தொகைக்கு இந்த மனு தாக்கல் செய்த நாளில் இருந்து 12 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
கல்வி அதிகாரிக்கு ரூ.1 லட்சம் அபராதம்
இந்த வழக்கில் பள்ளி நிர்வாகத்துக்கு சாதகமாக பதில் மனு தாக்கல் செய்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இது தொடர்பாக நீதிபதி உத்தரவில் கூறியிருப்பதாவது:
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சி.பத்மவாதி நீதிமன்றத்துக்கு தவறான தகவலை தெரிவித்துள்ளார். இதனால் மனுதாரருக்கு வழக்கு செலவுக்காக பத்மாவதி ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். இப்பணத்தை அவர் 2 மாதத்தில் மனுதாரருக்கு வழங்க வேண்டும்.
பத்மாவதி தற்போது பணியில் இருந்தால் அவரது சம்பளத்தில் இருந்தும், ஓய்வு பெற்றிருந்தால் அவரது ஓய்வூதியத்தில் இருந்தும் பணத்தை தவணை முறையில் பிடித்தம் செய்ய வேண்டும். இந்த வழக்கில் உண்மையை வெளிப்படுத்திய காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திரபிதாரிக்கு நீதிமன்றம் பாராட்டு தெரிவிக்கிறது என உத்தரவில் கூறப்பட்டிருந்தது.