

மத்திய அரசுக்கு எதிராக பகிரங்கமாகக் குரல் எழுப்பிவரும் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசனின் அணுகுமுறையால், காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு விதமான வதந்திகள் பரவிவருகின்றன.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முடிவுகள் குறித்து தமிழக காங்கிரஸாரிடம் இருந்து எவ்வித கருத்துகளும் வெளிப்படுத்தப்படாத நிலையில், ஜி.கே.வாசன் மட்டும் அரசுக்கு எதிராக பகிரங்கமாக கருத்துகளைக் கூறிவருகிறார்.
இலங்கைக்கு இந்தியா போர்க் கப்பல்களை வழங்கக்கூடாது என்று வலியுறுத்திவரும் அவர், இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசும், பிரதமர் மன்மோகன் சிங்கும் பங்கேற்கக் கூடாது என்று எச்சரித்துள்ளார். இந்த நிலைப்பாடும் அணுகுமுறையும், வாசன் குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு ஊகங்களைக் கிளப்பிவிட்டிருக்கிறது.
"காமன்வெல்த் மாநாடு நடைபெறுவதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால், அந்த மாநாட்டில் பங்கேற்பதை பிரதமர் மன்மோகன் சிங் தவிர்க்க வேண்டும். இதுதொடர்பாக, பிரதமரை மீண்டும் சந்தித்து என் கருத்துகளை வலியுறுத்துவேன்" என்கிறார் ஜி.கே.வாசன்.
மேலும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காணும் வகையில், இரு நாடுகளிடையே அனைத்துவிதமான ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
இத்தகைய விவகாரங்களில், தமிழக மக்களின் குரலையே தாம் பிரதிபலிப்பதாகச் சொல்கிறார் ஜி.கே.வாசன்.
அதேவேளையில், தன் தந்தை ஜி.கே.மூப்பனாரால் நிறுவப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் தொடங்கவேண்டும் என்று வாசன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
ஆனால், அதை அவருக்கு நெருக்கமானவர்கள் மறுக்கிறார்கள். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, கவனத்தை ஈர்க்கும் விதமாகவே இவ்வாறு மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்துவருகிறார் என்ற வியூகத்தையும் அவர்கள் முற்றிலும் மறுக்கிறார்கள்.
"தமிழ் மக்களின் உணர்வுகளை உண்மையான அக்கறையுடன் வாசன் வெளிப்படுத்தி வருகிறார். அதேநேரத்தில், இலங்கைத் தமிழர் விவகாரத்தில், மத்திய அரசு எடுக்கும் முடிவுகளால், நாடாளுமன்றத் தேர்தலில் எத்தகைய விளைவுகளை தமிழகத்தில் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது பற்றி டெல்லியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்குத் தெரியாது. இலங்கை வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புப் பெற்றுள்ள வெற்றி, இந்திய அரசுக்கு வலுவான பதிலைச் சொல்லியிருக்கிறது" என்கிறார்கள் வாசனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.