Published : 02 Sep 2016 12:48 PM
Last Updated : 02 Sep 2016 12:48 PM

மின் வசதியின்றி வாழும் சென்னபட்டினம் கிராம மக்கள்: உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக எச்சரிக்கை

மின்சாரம் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வரும் சென்னபட்டினம் கிராம மக்கள், உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் தானிப்பாடி அருகே உள்ளது சென்னபட்டினம் கிராமம். குறைந்த மக்கள் தொகை கொண்டது. வாக்காளர்கள் எண்ணிக்கையும் குறைவு. அதனால், அந்த கிராமத்தை ஆட்சியாளர்கள் புறக்கணித்து வருகின்றனர்.

பகலில் சூரிய வெளிச்சத்தையும் இரவு நேரத்தில் நிலா வெளிச்சத்தையும் நம்பி வாழும் மக்கள். மின்சாரம் மூலம் எரியும் மின் விளக்கு வெளிச்சத்தை வாழ்நாளில் பார்த்தது கூட கிடையாது. சாலை, குடிநீர், மருத்துவ வசதியும் கிடையாது. அப்படியே பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். விவசாயத்தை நம்பி வாழும் அவர்களுக்கு, அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்வதும் பழகிவிட்டது.

விவசாய விளைப் பொருட்களை தலையில் சுமந்து சந்தைக்கு கொண்டு வந்து விற்று வருகின் றனர். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை கட்டிலில் தூக்கிக் கொண்டு தானிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வருகின்றனர். அருகே உள்ள நாகக் கொள்ளை கிராமத்துக்கு வந்துதான் மளிகை மற்றும் ரேஷன் பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும். அவர்கள் வந்து செல்லும் 3 கி.மீ., தொலைவுள்ள சாலையும் மோசமாக உள்ளது.

தேர்தல் காலம் என்றால் சென்னபட்டினம் கிராமத்துக்கு வாக்கு சேகரிக்க அரசியல் கட்சிகள் செல்கின்றனர். அப்போது, மின்சார வசதி செய்து கொடுக்கப்படும் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்போம் என்று வாக்குறுதி அளிக்கின்றனர். அதன்பிறகு, அதனை நிறைவேற்றுவதில்லை என்பதுதான் கிராம மக்களின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.

அவர்கள் கூறும்போது, “சென்னபட்டினம் கிராமத்துக்கு மின்சார வசதியை செய்து கொடுக்கவேண்டும். சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவேண்டும். இதுகுறித்து ஆட்சியர்களி டம் பலமுறை முறையிட்டும் பலனில்லை. அரசின் சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை. எங்களது அடிப்படை கோரிக்கைகளை, உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு நிறைவேற்றித் தரவேண்டும். இல்லை என்றால், உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x