Published : 13 May 2017 09:58 AM
Last Updated : 13 May 2017 09:58 AM

ஈஷா யோகா மையத்தில் உள்ள 112 அடி உயர ஆதியோகி சிலைக்கு கின்னஸ் புத்தகம் அங்கீகாரம்

கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள, 112 அடி உயர ஆதியோகி திருமுகச் சிலை, உலகிலேயே மிகப் பெரிய மார்பளவு சிலை என்று கின்னஸ் புத்தகம் அங்கீகரித்துள்ளது.

கின்னஸ் சாதனை புத்தகத்தில், “உலகி லேயே மிகப் பெரிய மார்பளவுச் சிலையின் உயரம் 34.24 மீட்டர் (112 அடி), அகலம் 24.99 மீட்டர் (81 அடி), நீளம் 44.9 மீட்டர் (147 அடி).

இந்த சாதனையை தமிழகத்தின் ஈஷா அறக்கட்டளை செய்ததாக 11 மார்ச், 2017 அன்று உறுதி செய்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சாதனை ஈஷா யோகா மையத்துக்குக் கிடைத்துள்ள, 2-வது கின்னஸ் சாதனை விருதாகும். ஏற்கெனவே, ஈஷா அறக்கட்டளை 2006-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி 8,52,587 மரக்கன்றுகளை நட்டதற்காக கின்னஸ் சாதனை அங்கீகாரம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த திருமுகச் சிலையை வடிவமைக்க இரண்டரை ஆண்டுகள் ஆனதாகவும், அதை நிர்மாணிக்க 8 மாதங்கள் மட்டுமே ஆனதாகவும் ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு ஊக்கம் அளிக்கும் பிரம்மாண்ட அடையாளம்தான் இந்த முகம். மனிதர்கள் தன்னிலை மாற்றத்தைக் கொண்டுவர விரும்பினால், அதற்கானத் தீர்வை தங்களுக்குள்ளேயே தேடி உணர ஆதியோகி ஓர் அடையாளமாக, குறியீடாக இருந்து ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளார். உலகின் முதல் யோகியான ஆதியோகி, மனிதனின் தன்னிலை மாற்றத்துக்கென 112 வழிமுறைகளை வழங்கினார். அதன் குறியீடாகவே 112 அடி உயரச் சிலை அமைந்துள்ளது.

யோக பாரம்பரியத்தில் சிவனை யோக விஞ்ஞானத்தின் மூலமான, முதல் யோகியாக, குருவாகப் பார்க்கின்றனர். இந்தியாவின் மேலும் 3 பகுதிகளில் 112 அடி உயர திருமுகச் சிலை அமையவும் வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x