

சென்னை கொளத்தூர் தொகுதி யில் புதுப்பிக்கப்பட்ட எம்எல்ஏ அலுவலகத்தை அத்தொகு தியின் எம்எல்ஏவும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஜவஹர் நகரில் கொளத்தூர் தொகுதிக்கான எம்எல்ஏ அலுவ லகம் உள்ளது. ஸ்டாலின் 2-வது முறையாக இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதால் எம்எல்ஏ அலுவலகம் அனைத்து வசதிக ளுடன் புதுப்பிக்கப் பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட அலுவலகத்தை மு.க.ஸ்டாலின் நேற்று காலை திறந்து வைத்தார். அலுவலகத்தின் உள்ளே குத்துவிளக்கேற்றிய அவர், தொகுதி மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
பின்னர் 6 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் கல்வி உதவித் தொகை, 6 பெண்களுக்கு தையல் இயந்திரம் என பல்வேறு உதவிப் பொருட்களை வழங்கினார்.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபு, வில்லிவாக்கம் தொகுதி எம்எல்ஏ ரங்கநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறும்போது, “தமிழகத்தில் 2-வது முறையாக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு எப்போதும் இல்லாத அளவுக்கு மோசமடைந்துள்ளது. கடந்த 2 மாதங்களில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தினசரி கொலை, கொள்ளைகள், சங்கிலி பறிப்பு ஆகியவை நடைபெறுகின்றன. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு இருப்பதாகவே தெரியவில்லை. எனவே, குற்றங்களைத் தடுத்து சட்டம் - ஒழுங்கை காப்பாற்றும் பணியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும்” என்றார்.