Published : 27 Mar 2017 11:16 AM
Last Updated : 27 Mar 2017 11:16 AM
தருமபுரி மாவட்டம் தீர்த்தமலை கோயில் பகுதியில் குவிந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை தன்னார்வலர்கள் ஒரே நாளில் அகற்றி தூய்மைப்படுத்தினர்.
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் தீர்த்தமலை பகுதியில் அமைந்துள்ளது தீர்த்தகிரீஸ்வரர் கோயில். பிரபல ஆன்மீக தலமான இங்கு ஆண்டுதோறும் மாசி மாத இறுதியில் தேர்த் திருவிழா நடைபெறும். தேர்த் திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவது வழக்கம். இதர நாட்களில் தொடர்ச்சியாக இந்த கோயிலுக்கு திரளான பக்தர்கள் வருகை இருக்கும்.
மலை மீது அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கு அடிவாரத்தில் இருந்து சுமார் அரை மணி நேரம் நடந்து பயணிக்க வேண்டும். இந்த மலைப்பாதையை ஒட்டி பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் அதிக அளவில் தேங்கிக் கிடந்ததால் அப்பகுதியின் சுகாதாரம் மிகவும் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. மேலும், வன விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களால் தீங்கு ஏற்படும் சூழலும் நிலவியது.
இந்நிலையில், அரூர் பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சுமார் 200 பேர் இணைந்து கோயில் பகுதியில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நடைபாதையை ஒட்டியும், கோயிலைச் சுற்றியும் வீசப்பட்ட காலி குடிநீர் பாட்டிகள், பிளாஸ்டிக் பைகள், ஐஸ்கிரீம் உள்ளிட்ட உணவுப் பண்டங்களை உண்ட பின் வீசப்பட்ட கப்புகள் போன்ற பொருட்கள் அனைத்தையும் இந்தக் குழுவினர் சேகரித்தனர். இவ்வாறு சேகரிக்கப்பட்ட குப்பைகள் சாக்குகளில் மூட்டைகளாகக் கட்டப்பட்டது. பின்னர் அவை, ஒரு சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.
இதுபற்றி தன்னார்வலர்களுக் கான ஒருங்கிணைப்பாளரும் கால்நடை மருத்துவருமான பழனி கூறியது:
தருமபுரி மாவட்டம் தீர்த்தமலை கோயில் பகுதியில் குவிந்து காணப்படும் குப்பைகள் குறித்து கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஜெயமோகன் அவரது வலைத்தளத்தில் எழுதியிருந்தார். இதைப் பார்த்தபோது நமது ஊரின் நிலை பற்றிய கவலையும், குப்பைகளை அகற்ற வேண்டும் என்ற எண்ணமும் ஏற்பட்டது. ஆர்வமுள்ளவர்களை இந்தப் பணியில் இணைத்துக் கொள்ளும் நோக்கத்துடன் ஃபேஸ் புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக இதுபற்றி தகவல் வெளியிட்டோம். உடனே அரூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தூய்மைப் பணியில் பங்கெடுக்க விருப்பம் தெரிவித்தனர். அதேபோல, குறிப்பிட்ட நாளில் அனைவரும் வந்தும் சேர்ந்தனர். வனத்துறையினரும் உடன் இணைந்து கொண்டனர். அரூர் அரிமா சங்கமும் போதிய ஒத்துழைப்பு வழங்கினர்.
காலை முதல் நண்பகல் வரை மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணியில் தீர்த்தமலை தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. எதிர்காலத்தில் தீர்த்தமலை பகுதியில் இதுபோன்று பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் தேங்காத வகையில் மலையடிவாரத்தில் நிரந்தர சோதனை மையம் அமைக்க வேண்டும். சமூக ஊடகங்கள் வாயிலாக அளிக்கப்பட்ட தகவலை ஏற்று ஏராளமான தன்னார்வலர்கள் இந்தப் பணிக்காக திரண்டது உற்சாகத்தையும், தன்னம்பிக்கை யையும் அளித்துள்ளது. இதே வேகத்துடன் அரூர் பெரிய ஏரியை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ளவும் திட்டமிட்டு வருகிறோம்.
இவ்வாறு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT