Published : 07 Feb 2017 12:42 PM
Last Updated : 07 Feb 2017 12:42 PM

ஜெ.வை நம்பி வாக்களித்த மக்களுக்கு சசிகலா துரோகம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

முதல்வர் பதவியில் அமர நினைக்கும் சசிகலா, ஜெயலலிதாவை நம்பி வாக்களித்த மக்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை இழைத்திருக்கிறார் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், ஆளுநர் இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்ற அரசியல் சட்ட வெற்றிடம் பற்றி தீவிர ஆலோசனை நடத்தி, மாநில நிர்வாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த சில தினங்களாக அதிமுக அரசியலில் தோன்றிய புதுமுக பொதுச் செயலாளர் சசிகலா நடத்தும் அரசியல் கேலிக்கூத்துகள் தமிழகத்தின் பெருமையையும், தமிழக மக்களின் புகழையும் அகில இந்திய அளவில் - ஏன் உலக அளவில் கெடுக்கும் விதத்தில் அமைந்திருப்பது வேதனைக்குரியது.

'எனக்கு அரசியல் ஆசையே இல்லை' என்று கூறி, ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் மீண்டும் அடைக்கலம் தேடியவர் பிறகு திடீரென்று அக்கட்சியின் பொதுச் செயலாளரானார். அது அவர்கள் உட்கட்சி பிரச்சினை என்று கருதினோம். ஆனால் இன்றைக்கு மாநில நலனுக்கு விரோதமாக, மாநிலத்தில் இருக்கும் நிலையான ஆட்சியை சீர்குலைக்கும் விதத்தில் ஒரு சுயநல திருவிளையாடலை நடத்தியிருக்கிறார் சசிகலா என்பதைக் காணும் போது எல்லாம் பதவி படுத்தும் பாடு என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

முதல்வராக வேண்டும் என்று சசிகலா துடிப்பதை இன்றைக்கு அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல - தமிழக மக்கள் அனைவருமே ஏற்றுக் கொள்ளவில்லை. 'விரும்பத்தகாத ஒரு சூழல் தங்கள் வீடு தேடி வருகிறதே. இதற்காகவா வாக்களித்தோம்' என்று தமிழக மக்கள் கொதிநிலை அடைந்திருக்கிறார்கள்.

இன்றைய 'தி இந்து' ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவந்துள்ள தலையங்கத்தில் 'சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு ஒரு வாரத்தில் வரவிருக்கின்ற நேரத்தில் சசிகலா முதல்வராக பதவியேற்கக் கூடாது' என்று எழுதியிருப்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அந்த தலையங்கத்தில், 'உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை சசிகலா பொறுமை காத்திருக்க வேண்டும்' எனவும், 'முதல்வராக பொறுப்பேற்று தீர்ப்பை எதிர்கொண்டால் நீதிமன்றத்தின் கடுமையில் இருந்து தப்பிக்கலாம் என்ற தவறான நம்பிக்கையில் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்' என்றும் சுட்டிக்காட்டியிருப்பது தார்மீக நெறிகள் குறித்து கவலைப்படும் அனைவராலும் அச்சுப் பிசகாமல் ஏற்றுக் கொள்ள வேண்டிய அம்சமாகும்.

நிலையான ஆட்சியை ஒரே இரவில் 'காபந்து சர்க்காராக' மாற்றியிருக்கின்ற சசிகலா முதல்வர் ஆவதற்காக மக்கள் நிச்சயமாக வாக்களிக்கவில்லை. ஏன் அதிமுக தொண்டர்களே கூட அதற்காக வாக்களிக்கவும் இல்லை. சசிகலாவுக்காக அவர்கள் யாரும் பிரச்சாரம் செய்யவும் இல்லை.

ஜெயலலிதாவின் மறைவைப் பயன்படுத்தி கொல்லைப்புறமாக இப்போது முதல்வர் பதவியில் அமர நினைக்கும் சசிகலா மறைந்த ஜெயலலிதாவை நம்பி வாக்களித்த மக்களுக்கு மன்னிக்கமுடியாத துரோகத்தை இழைத்திருக்கிறார். இந்த நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் சுட்டிக்காட்டுவது பொருத்தமானது என்று கருதுகிறேன்.

ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஆனதிலிருந்தே அவரது பதவிக்குக்கூட மதிப்பளிக்காமல், 'சசிகலா முதல்வராக வேண்டும்' என்று அமைச்சர்களும், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும் வெளிப்படையாகவே பேட்டியளித்தார்கள். இப்போது நிகழ்ந்துள்ளது போன்ற ஒரு சூழல் உருவாகி விடக் கூடாது என்பதற்காகத்தான் நான் ஆரம்பம் முதலாகவே 'முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்' என்று மீண்டும் மீண்டும் கூறி வந்தேன்.

இன்றைக்கு முதல்வர் பதவியைப் பிடிக்க வேண்டும் என்ற ஆத்திரத்திலும், அவசரத்திலும் தமிழக ஆட்சி நிர்வாகத்தை சீர்குலைக்க சசிகலா நிகழ்த்தியுள்ள இந்த நாடகம் என் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்த்தியுள்ளது.

ஒரே இரவில் மெஜாரிட்டி அரசின் முதல்வராக இருந்த தங்களின் கட்சியைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வதை 'காபந்து முதல்வராக்கி' வினோதமான அரசியலை மட்டும் அல்ல - அரசியல் சட்டத்தில் நம்பிக்கை வைத்திருப்போர் வெட்கிக்குனியும் அரசியலையும் செய்து விட்டார் சசிகலா. பதவியைப் பிடிக்கும் சசிகலாவின் பேராசைக்காக, அரசியல் சட்ட மாண்பு தமிழகத்தில் பரிதாபமாக சீர்குலைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மக்கள் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. 225க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். காவிரி பிரச்சினை, நீட் பிரச்சினை என்று விவசாயிகள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. இப்படி மாநிலம் பல்வேறு நிர்வாக சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில் 'காபந்து சர்க்கார்' தமிழகத்தில் இருப்பது மக்கள் நலனுக்கு விரோதமானது மட்டுமல்ல - முற்றிலும் எதிர்மறையாக இருக்கிறது.

அது மட்டுமின்றி முதல்வர் பதவியின் கண்ணியத்தையும் சூறையாடி, மாநில சட்டப்பேரவையின் மாண்பையும் சசிகலா புகழ் பாடி கெடுத்து இன்றைக்கு தமிழகத்தில் பிணைக்கைதிகள் போல் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை பிடித்து வைத்து நிறைவேற்றியிருக்கிறார் அதிமுகவின் திடீர் பொதுச் செயலாளர் சசிகலா. இந்த அரசியல் அநாகரீக, அரசியல் சட்ட விரோத செயலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தகைய சூழலில், ஆளுநர் இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்ற அரசியல் சட்ட வெற்றிடம் பற்றி தீவிர ஆலோசனை நடத்தி, மாநில நிர்வாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்த நடவடிக்கையின் பின்னனியில் 'அடுத்து வரவிருக்கின்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு' மற்றும் 'அமைய வேண்டிய நிலையான ஆட்சி' ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு மக்கள் விரும்பும் நல்லதொரு முடிவை ஆளுநர் அவர்கள் எடுக்க வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x