

ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளை யடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஈரோடு ரயில்வே பணிமனையில் தனிப்படை போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர்.
ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட தொகையில் கோவை, சத்திய மங்கலம் போன்ற இடங்களில் உள்ள ஐஓபி வங்கிக் கிளைகளில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பணமும் அடங்கியுள்ளது. சத்திய மங்கலத்தில் இருந்து சாலை வழி யாக சேலத்துக்கு பணம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதால், அது குறித்தும் விசாரணை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேலத்தில் இருந்து சென்னைக்கு பணம் கொண்டுசெல்ல பயன்படுத்தப்பட்ட ரயில் பெட்டி கோவையில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 7-ம் தேதி இரவு கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு இரவு 8 மணியளவில் புறப்பட்ட பயணி கள் ரயிலில் இந்த பெட்டி இணைக் கப்பட்டு, இரவு 10 மணியளவில் ஈரோட்டில் இப்பெட்டி கழற்றி விடப்பட்டது. பின்னர் இந்த ரயில் பெட்டி ஈரோடு ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு, காலை 5 மணிக்கு ஈரோட்டில் இருந்து சேலம் வழியாக மேட்டூர் அணைக்கு செல்லும் பயணிகள் ரயிலில் இணைக்கப்பட்டது.
பின்னர், இந்த பெட்டி சேலத்தில் கழற்றி விடப்பட்டு அங்கு நிறுத்தப்பட்டது. அதன் பிறகே இந்த ரயில் பெட்டியில் பணம் உள்ள மரப்பெட்டிகள் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளன.
பணம் கொண்டு செல்ல பயன் படுத்தப்பட்ட ரயில் பெட்டிகள் ஈரோடு ரயில்வே பணிமனையில் நிறுத்தப்பட்டதால், இப்பெட்டியில் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர்களிடம் விசா ரணை நடத்துவதற்காக நேற்று சேலம் மாநகர உதவி ஆணையர் மோகன் தலைமையிலான போலீ ஸார் ஈரோடு வந்தனர். பணம் கொள்ளையடிக்கப்பட்ட ரயில் பெட்டி 7-ம் தேதி ஈரோடு ரயில்வே பணிமனையில் இருந்தபோது, பணியில் இருந்த ரயில்வே ஊழியர் களிடம் விசாரணை நடத்தினர். 7-ம் தேதி சந்தேகத்துக்கிடமான வெளியாட்கள் வந்து சென்றனரா என்பது குறித்தும், விசாரணை நடத்தினர்.