

காவலர் வீட்டுவசதி குறித்து பேச திமுகவினருக்கு அருகதை இல்லை என்ற முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அமளியில் ஈடு பட்டதால் சட்டப்பேரவை நட வடிக்கைகள் 40 நிமிடம் முடங்கின.
சட்டப்பேரவையில் பணியாளர் நலன், நிர்வாக சீர்திருத்தம், பொதுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. அப்போது நடந்த விவாதம்:
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்:
காவல் துறை யினர் வீட்டுவசதிக்காக ரூ.422 கோடியில் 2,623 வீடுகள் கட்டப்படும் என காவல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. டிஎஸ்பிக்கள், தீயணைப்பு கோட்ட அலுவலர் களுக்காக ‘உங்கள் சொந்த இல்லம்’ திட்டத்தில் மாவட்டத் தலைநகரங்களில் தலா 10 ஏக்கரில் வீடுகள் கட்டப்படும் என 2012-ல் முதல்வர் அறிவித்தார். அதன்படி, சென்னை மேலக் கோட்டையூர் தவிர மற்ற 31 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா?
*முதல்வர் ஜெயலலிதா:
காவல் துறையினருக்கு வீட்டுவசதி செய்து கொடுப்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவருக்கு திடீரென அக்கறையும், கவலை யும் வந்துள்ளது. காவல் துறையினருக்கு வீட்டுவசதி செய்து கொடுப்பது தொடர்பாக யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். ஆனால், திமுகவினர் கேள்வி கேட்கக் கூடாது. அதைக் கேட்க திமுகவினருக்கு அருகதை இல்லை. காவல் துறையினருக்கு வீடு கட்டித் தருவதற்காக 1980-ல் எம்ஜிஆர் தனது ஆட்சியில் காவல் துறை வீட்டு வசதிக் கழகத்தை ஏற்படுத்தினார். 1989-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்தக் கழகம் மூடப்பட்டது. 1991-ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மீண்டும் காவலர் வீட்டு வசதிக் கழகம் தொடங்கப்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டன. இந்த விவரம் எல்லாம் காவல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு முதல்வர் கூறி யதும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டனர்.
பேரவைத் தலைவர் பி.தனபால்:
எதிர்க்கட்சித் தலைவர் கேட்ட கேள்விக்கு முதல்வர் பதில் அளித்துள்ளார். எனவே, அனைவரும் அமைதியாக அமருங்கள்.
மு.க.ஸ்டாலின்:
முதல்வரின் விளக்கத்தைக் கேட்க தயாராக இருக்கிறோம். ஆனால், ‘இது பற்றி பேச அருகதை இல்லை’ என அவர் பேசலாமா?
தொடர்ந்து அவர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப் பினர்கள் எழுந்து நின்று கோஷ மிட்டனர்.
பேரவைத் தலைவர்:
பேரவை யில் இன்று முக்கிய அலுவல்கள் உள்ளன. முக்கிய தீர்மானம் வர உள்ளது. எனவே, உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஸ்டாலின் பேசியது அவைக் குறிப்பில் இருந்து நீக்கியது நீக்கியதுதான். அதை மாற்ற முடியாது.
இவ்வாறு விவாதம் நடந்தது. திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் பேரவை நடவடிக்கைகள் சுமார் 40 நிமிடம் முடங்கின.
பின்னர் சிறுவாணி அணை தொடர்பாக முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. அதன் பிறகு, திமுக உறுப்பினர்கள் மீண்டும் அதே பிரச்சினையை எழுப்பினர். பேரவைத் தலைவர் அனுமதி மறுக்கவே, திமுக உறுப்பினர்கள் சுமார் ஒரு மணிநேரம் நின்றபடியே கோஷம் எழுப்பினர். இதனால் பேரவையில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.