

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தொழிற்சங்கத்துக்குச் சொந்தமான, திருச்சியில் உள்ள 5 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட 3 கோடி ரூபாய் சந்தை மதிப்புகொண்ட நிலத்தை வெறும் ரூ.20 லட்சத்துக்கு அக்கட்சியின் மாநிலச் செயலாளரான தா.பாண்டியன் தனி நபர் ஒருவருக்கு விற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து ‘தி இந்து’வில் கடந்த ஜூலை 18-ம் தேதி செய்தி வெளியாகியிருந்தது. அதற்கு அப்போது அவருடைய கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், முறைகேடாக நடந்த நில விற்பனையை ரத்து செய்யக் கோரி திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க அமைப்பான ஏஐடியூசி வழக்கு தொடுத்திருக்கிறது (வழக்கு எண்-ஓ.எஸ்.எண்: 173/2014).
ஏஐடியூசி அமைப்பின் திருச்சி மாவட்ட பொதுச் செயலாளரான மணி சார்பில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 28.03.2014 அன்று திருச்சியில் கூடிய ஏஐடியூசி மாவட்டக் குழுக் கூட்டத்தின் தீர்மானம் எண் 4-ன்படி அந்த அமைப்பின் மாவட்ட பொதுச் செயலாளரான மணிக்கு வழக்கு தொடுக்கவும், வழக்கு நடத்தவும் அதிகாரம் வழங்கப்பட்டது.
விசாரணைக்கு வருகிறது
திருச்சியின் பிரபல வழக்கறிஞரும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான எஸ்.கே.மணி இந்த வழக்கில் ஏஐடியூசி-க்காக ஆஜராகிறார். இந்த வழக்கு நவம்பர் 28-ம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது.
வழக்கு விவரம்
1937-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சவுத் மெட்ராஸ் எலெக்ட்ரிசிட்டி ஒர்க்கர்ஸ் யூனியன் என்கிற அமைப்புக்குச் சொந்தமான, திருச்சி பழைய குட்ஷெட் சாலையில் உள்ள 5000 சதுர அடி நிலத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான தா.பாண்டியன், சென்னை பெரம் பூரில் வசிக்கும் ரபீக் அகமது என்பவருக்கு ரூ.20 லட்சத்துக்கு 22.03.2012 அன்று கிரயம் செய்து கொடுத்துள்ளார்.
1973-ம் ஆண்டு இந்த சங்கம் கலைக்கப்பட்டு தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் சம்மேள னத்துடன் இணைக்கப் பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்மேளனம் ஏஐடியூசி அமைப்புடன் இணைவு பெற்றதாகும். அந்த வகையில் இந்த நிலம் தொடர்பான உரிமை தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் சம்மேளனம் மற்றும் ஏஐடியூசி திருச்சி மாவட்ட அமைப்புக்கு மட்டுமே உள்ளது.
ரூ.90 லட்சம் அரசு வழிகாட்டி மதிப்புள்ள இந்த நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.3 கோடி ஆகும். குறைந்த விலைக்கு விற்பனை செய்ததன் மூலம் தா.பாண்டியன் மோசடி செய்துள்ளார். அதனால் முறைகேடாக விற்பனை செய் யப்பட்ட இந்த நில விற்ப னையை நீதிமன்றம் ரத்து செய்து நிலத்தை திருச்சி மாவட்ட ஏஐடியூசி அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் சம்மேளனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் தாக்கல் செய் யப்பட்டுள்ள வழக்கில் கூறப்பட் டுள்ளது.
கட்சியை விட்டு நீக்க முயற்சி?
மாநிலச் செயலாளர் மீதே வழக்கு தொடுத்திருப்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரத்தில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே வழக்கு தாக்கல் செய்த தொழிற்சங்க பிரமுகரான மணியை கட்சியை விட்டு நீக்குவதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடப்பதாக அக் கட்சிப் பிரமுகர்கள் கூறுகின் றனர்.