

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் அரசு மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் 17-ம் தேதி மீண்டும் நேரில் ஆஜராகுமாறு வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள் ளனர். விசாரணையில் இதுவரை முரண் பட்ட தகவல்கள் கிடைத்திருப்பதால், உண்மையான தகவல்களை பெறும் நோக்கில் அவர்களிடம் அடுத்தகட்ட விசா ரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்காக அதிக அளவில் பணப் பட்டுவாடா நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கிடைத்த தகவலின்பேரில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் வீட்டில் வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் கடந்த 7-ம் தேதி சோதனை நடத்தினர். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார், அதிமுக முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ்.கீதாலட்சுமி வீடு உட்பட தமிழகம் முழுவதும் 55 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.
இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு ரூ.89 கோடியே 65 லட்சத்து 80 ஆயிரம் வழங்கிய தற்கான ஆதாரங்கள் சிக்கியதாகவும், அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 5 அமைச்சர்கள், ஒரு மாவட்ட செயலாளர் பெயர் இடம்பெற்றிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இந்த நிலையில், அமைச்சர் விஜய பாஸ்கர், சரத்குமார், கீதாலட்சுமி, சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு வருமான வரி அதிகாரிகள் கடந்த 9-ம் தேதி சம்மன் அனுப்பினர். மறுநாள் விஜய பாஸ்கர், சரத் குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் நேரில் ஆஜராகினர். அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளித்தனர். இந்த காட்சிகளை அதிகாரிகள் வீடியோ விலும் பதிவு செய்துள்ளதாக கூறப்படு கிறது.
இதில், கீதாலட்சுமி மட்டும் நேரில் ஆஜராகாமல், சம்மனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை தள்ளுபடி செய்த நீதிமன்றம், வருமான வரி அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத் தியது. இதையடுத்து, அவரும் வருமான வரிஅதிகாரிகள் முன்பு ஆஜராகி, அவர்களது கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
இந்நிலையில், அமைச்சர் விஜய பாஸ்கர், கீதாலட்சுமி ஆகியோர் 17-ம் தேதி மீண்டும் நேரில் ஆஜராகுமாறு வருமான வரி அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு முரண்பட்ட பதில்களே இதுவரை கிடைத்துள்ளதாக கூறப்படு கிறது. இதனால், உண்மையான விவரங் களைப் பெறுவதற்காகவே, அவர்கள் இருவரையும் மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.