

பந்த் அல்லது வேலைநிறுத்தப் போராட்ட நேரங்களில் பொதுமக் களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை என உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், கல்வீச்சில் கண் பார்வை இழந்த தனியார் வங்கி ஊழியருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவையைச் சேர்ந்த எஸ்.கிருஷ் ணசாமி கடந்த 2002-ல் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப் பதாவது:
நான் தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக மதுரையில் தங்கியிருந்து பணிபுரிந்து வருகிறேன். என்னுடைய குடும்பம் கோவையில் வசித்து வருகிறது. வாரம்தோறும் சனிக்கிழமை இரவு கிளம்பி கோவைக்கு சென்றுவிட்டு, ஞாயிறு இரவு கோவையில் இருந்து மதுரைக்கு வருவது வழக்கம். அதுபோல கடந்த 30.6.2001 அன்று கோவை சென்றேன்.
அன்று நள்ளிரவில் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைக் கண்டித்து ஜூலை 2-ம் தேதி திமுகவினர் பந்த் அறிவித்தனர்.
ஆனால் நான் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதால் ஜூலை 1-ம் தேதி மாலை 6 மணிக்கே கோவையில் இருந்து மதுரைக்கு அரசு பஸ்ஸில் ஏறினேன். அப்போது பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோர் பந்த் தொடங்குவதற்கு முன்பாகவே மதுரைக்கு பாதுகாப்பாக சென்றுவிடலாம் என உறுதியளித்தனர். அதுபோல தமிழக அரசும், அந்த பந்த்தால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் நேரிடாது எனவும் அன்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பஸ்கள் இயங்கும் எனவும் அறிவித்தது.
அதை நம்பித்தான் பஸ்ஸில் பயணம் செய்தேன். ஆனால் நாங்கள் மதுரைக்கு அருகில் உள்ள பரவையை நெருங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென எங்கிருந்தோ வந்த பெரிய கல் ஒன்று பஸ் கண்ணாடி மீது பட்டு, நேரடியாக என் இடது கண்ணில் பட்டது. இதனால் எனது கண்ணில் ரத்தம் வழிந்து கண்விழியே வெளியே பிதுங்கியது. கன்னத்திலும் ரத்தக் காயம் ஏற்பட்டது. இதில், எனது ஒரு கண்ணில் பார்வை முழுமையாக பறிபோய்விட்டது.
இந்த அறுவை சிகிச்சையால் எனக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுவதுடன், முக வடிவமும் மாறிவிட்டது. பார்வை பறிபோன அதே கண்ணில் மீண்டும் ரத்தம் உறைந்து விட்டதாகக் கூறி திருப்பூரிலும் அறுவை சிகிச்சை செய்தேன். இந்த சம்பவம் குறித்து சமயநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். எனவே எனக்கு ஏற்பட்ட இழப்புக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு நடந்தது. அப்போது நீதிபதி, “பந்த் அல்லது வேலைநிறுத்தம் நடைபெறும் காலகட்டங்களில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதும், மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டியதும் அரசின் கடமை. அதேநேரம் இதுபோன்ற அசாதாரண சூழல்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு அரசுதான் கண்டிப்பாக இழப்பீடு வழங்க வேண்டும். கல்வீச்சு சம்பவத்தால் மனுதாரருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கான மருத்துவச் சான்றுகளையும் ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார். ஆகவே அவருக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக ரூ.10 லட்சத்தை 7.5 சதவீத வட்டியுடன் இந்த வழக்கு தொடரப்பட்ட நாளில் இருந்து கணக்கிட்டு 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும். கூடுதல் இழப்பீடு வேண்டுமென மனு தாரர் விரும்பினால் உரிய கீழ் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடலாம்” என உத்தரவிட்டார்.