Published : 07 Feb 2017 09:03 AM
Last Updated : 07 Feb 2017 09:03 AM

மணவை முஸ்தபா காலமானார்: தலைவர்கள் இரங்கல்

தமிழறிஞர் மணவை முஸ்தபா சென்னையில் நேற்று கால மானார். அவருக்கு வயது 82. வாத நோயால் அவதிப்பட்டு வந்த அவருக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது.

அறிவியல் தமிழ் வளர்ச்சிப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் மணவை முஸ்தபா. அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி துறை சார்ந்த 8 கலைச்சொல் அகராதிகளை வெளியிட்டுள்ளார். 30 மொழிகளில் வெளிவந்த யுனெஸ்கோ கூரியர் இதழ் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 35 ஆண்டுகள் பணியாற்றினார். என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா களஞ்சியம் தமிழ்ப் பதிப்பின் பொறுப்பாசிரியராகவும் திறம்பட பணிபுரிந்துள்ளார்.

அறிவியல் தமிழ் மன்றத் தலைவர், அறிவியல், தமிழ் அறக்கட்டளை தலைவர், தமிழ் மொழி மேம்பாட்டு வாரிய உறுப்பினர், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன உறுப்பினர் உட்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித் துள்ளார். கலைமாமணி விருது, திருவிக விருது, எம்ஜிஆர் விருது, தமிழ் தூதுவர் விருது, தந்தை பெரியார் விருது உட்பட 35-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி உட்பட 31 நூல்களை எழுதியிருக்கிறார்.

மணவை முஸ்தபாவின் மனைவி சவுதா. அண்ணல், செம்மல் என்ற 2 மகன்களும், தேன்மொழி என்ற மகளும் உள்ளனர். மணவை முஸ்தபாவின் உடல் அமைந்தகரை பள்ளிவாசல் அருகேயுள்ள அடக்க ஸ்தலத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

தலைவர்கள் இரங்கல்

மணவை முஸ்தபாவின் மறைவுக்கு தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித் துள்ளனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:

மணவை முஸ்தபா தமிழ் மொழியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதில் தன்னிகரில்லாத் தொண்டாற்றிய அறிஞர். தனி ஒரு மனிதனாக எட்டு கலைச் சொற்கள் அகராதிகளை வெளி யிட்டு சாதனை படைத்தார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:

அறிவியல், மருத்துவம், பொறியியல் சார்ந்த ஏராளமான நூல்களை மணவை முஸ்தபா பிறமொழிகளில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார். அவரது மறைவு அறிவியலுக்கும், தமிழுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்:

யுனெஸ்கோ கூரியர் தமிழ் பதிப்பை 35 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி உலக அரங்கில் தமிழ் வளர்ச்சிக்காக அயராது பாடு பட்டவர் மணவை முஸ்தபா. தமது வாழ்நாள் முழுவதும் தமிழின் வளர்ச்சிக்காக அரும் பாடுபட்டவர்.

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன்:

அறி வியல் தமிழ் வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றிய அறிஞர் மணவை முஸ்தபாவின் மறைவு அளவற்ற துயரத்தை அளித் துள்ளது. எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய மூன்று முதல்வர்களால் 5 விருது கள் அளிக்கப்பெற்று பாராட் டப்பட்ட ஒரே தமிழறிஞராகத் திகழ்ந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x