

புத்தாண்டை வரவேற்க புதுச்சேரியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் குவியத்தொடங்கியுள்ளனர். இதனால் நட்சத்திர விடுதிகள் தொடங்கி சாதாரண விடுதிகள் வரை பெரும்பாலானவை நிரம்பிவிட்டன.
ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டுக்கு புதுச்சேரி களை கட்டத் தொடங்கிவிடும். வரும் புத்தாண்டைக் கொண்டாட உலகின் பல நாடுகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் புதுச்சேரிக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
நகரம் முழுக்க உணவகங்கள், விடுதிகள் முன்பு அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன. துள்ளல் இசை, நடனம், கலை நிகழ்ச்சிகள், உணவு, சிறப்பு பரிசு இவற்றுடன் ‘வேண்டும் அளவுக்கு மது’ என்ற அறிவிப்பும் தவறாமல் இடம்பெற்றுள்ளது.
தெற்கு பிரான்ஸைப் பிரதி எடுத்தாற் போல் வடிவமைக் கப்பட்டுள்ள ஒயிட் டவுன் பகுதியில் உள்ள பாரம்பரிய விடுதிகளில் வெளிநாட்டினர் முன்பதிவு செய்துள்ளனர். உணவு விடுதிகளிலும் தற்போது முன்பதிவு இறுதி நிலையில் உள்ளது.
புதுவையில் ஆண்டுதோறும் ஜனவரி 1-ம் தேதி அரசு விடுமுறையாக இருந்து வந்தது. ஆனால், 2014-ல் முதல் முறையாக ஜனவரி 1-ம் தேதி விடுமுறை நாளாக அரசிதழில் இம்முறை தெரிவிக்கவில்லை. அதை மறுபரிசீலனை செய்ய அரசு ஊழியர்கள் சங்கத்தினர் அரசுக்கு வலியுறுத்தினர். இதையடுத்து ஜனவரி 1-ம் தேதியன்று விடுமுறை அளிக்க அரசு முடிவு எடுத்தது. இதற்கான கோப்பு துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியாவுக்கு அனுப்பப்பட்டது. அதில் ஆளுநர் கையெழுத்திட்டுள்ளார்.
இதையடுத்து, புதுவை அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஜனவரி முதல் நாள் விடுமுறை என்றும் அதற்கு ஈடாக வரும் மார்ச் 29-ம் தேதி வேலை நாள் என்றும் உள்துறை சார்பு செயலர் கண்ணன் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.