Published : 21 Sep 2013 11:56 AM
Last Updated : 21 Sep 2013 11:56 AM

எனக்கு டி.என்.ஏ. டெஸ்ட் எடுங்க சார்

கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்

பிதற்றிப் பிதற்றி ஏதேதோ பேசுகிறான். கடந்த நான்கு மாதங்களாக, முடை நாற்றம் வீசும் அந்த வீட்டுக்குள் ஈக்களுக்கு மத்தியில் முடங்கிக் கிடந்திருக்கிறான். கலெக்டராவதற்காகத் துடித்துக் கொண்டிருந்த பிள்ளை, கனவுகளை தொலைத்துவிட்டு நிற்பது எதனால்? கந்தக்குமாருக்கு என்ன ஆயிற்று?

எவ்வளவு பெரிய மாளிகையை காட்டினாலும் யாருமே சொந்த வீட்டைத்தான் சொர்க்கம் என்பார்கள். ஆனால், சொந்த வீட்டுக்குள்ளேயே நான்கு மாதங்கள் நரகத்தை அனுபவித்திருக்கிறான் பதினைந்து வயது சிறுவன்!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள ஒரு கிராமம் அது. இங்குள்ள மதுரைவீரன் - மருதாயி தம்பதியின் இரண்டாவது பிள்ளை கந்தக்குமார் (பெயரை மாற்றி இருக்கிறோம்). தலித்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் சாதியில் பிறந்தவர் மதுரைவீரன். இவரிடம் பணம் காசுக்குத்தான் பஞ்சம்; புத்திர பாக்கியத்தில் சுக்கிர தசை சுழற்றியடித்தது. 19 வயதில் மூத்த மகள், 6 மாதக் கைக்குழந்தையாய் கடைசி மகன் என மொத்தம் எட்டு குழந்தைகளுக்கு தகப்பன் இந்த மதுரை வீரன்.

இவர்களது வீட்டைப் பார்த்தால் இதற்குள்ளேயா இத்தனை பேரும் உண்டு உறங்குகிறார்கள்? என்று அசந்து போவீர்கள். இத்தனையையும் சகித்துக்கொண்டு கலெக்டர் கனவோடு பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தான் கந்தக்குமார். கடந்த வருடம் ஒன்பதாவது வகுப்பிலேயே இவன்தான் முதல் மாணவன். ’நிச்சயம் கலெக்டரா வருவேடா’ என்று ஆசிரியர் கைகுலுக்கியபோது அசந்து போனான் கந்தக்குமார். ‘வாத்தியார் என்னைய தொட்டுக் கைகுலுக்கிட்டாருப்பா’ அப்பாவிடம் ஆச்சரியப்பட்டுச் சொன்னான். ‘கலெக்டர் ஆவாய்’ என்று சொன்னதைவிட யாருமே தொடாத தன்னை ஆசிரியர் தொட்டுவிட்டார் என்பதே தேடக் கிடைக்காத பெருமையாய் இருந்தது அவனுக்கு.

ஆனால் இப்போது? இது எதுவுமே சரிவர ஞாபகமில்லை அவனுக்கு. பிதற்றிப் பிதற்றி ஏதேதோ பேசுகிறான். கடந்த நான்கு மாதங்களாக, முடை நாற்றம் வீசும் அந்த வீட்டுக்குள் புத்தகப் பையை தலைக்கு வைத்துக் கொண்டு ஈக்களுக்கு மத்தியில் முடங்கிக் கிடந்திருக்கிறான். வஞ்சகமில்லாமல் பிள்ளைகளை பெத்துப் போடத் தெரிந்தவர்களுக்கு, வீட்டுக்குள் ஒரு பிள்ளை ஏன் இப்படி முடங்கிக் கிடக்கிறது என்று கேட்கவும் நேரமில்லை. அந்த அக்கறையு மில்லை. கலெக்டராவதற்காகத் துடித்துக் கொண்டிருந்த பிள்ளை கனவுகளை தொலைத்துவிட்டு நிற்பது எதனால்? கந்தக்குமாருக்கு என்ன ஆயிற்று?

மனநல சிகிச்சைக்காக கந்தக் குமாரை அந்த நரகத்திலிருந்து மீட்டு வந்த மதுரை ‘எவிடென்ஸ்’ அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் விவரிக்கிறார்..

“நல்லா படிச்சிட்டு இருந்த பையன் சார். அவன் இன்னைக்கி இந்த நிலையில இருக்கதுக்கு காரணமே பெத்தவங்கதான். இத்தன புள்ளைங்கள பெத்துப் போடுறோமே, இதுகள நல்லா வளத்து ஆளாக்க முடியுமாங்கிற கவலை கொஞ்சம்கூட இல்லை. அந்தாளுக்கு 47 வயசாச்சு. இப்பவும் கைக்குழந்தை இருக்கு. இதைச் சொல்லித்தான் கந்தக்குமாரோட படிக்கிற பசங்க அவன கிண்டல் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. ’உங்க அப்பனுக்கு வேற வேலையே இல்லையாடா?’ன்னு அந்தப் பசங்க கேட்டதையே அவனால தாங்கிக்க முடியல. தனக்குள்ளயே புழுங்கிச் செத்துருக்கான். மேற்கொண்டும் அந்தப் பசங்க, ‘ஏண்டா... நீங்க அக்கா தம்பி தங்கச்சி எல்லாரும் ஆளுக்கு ஒரு தினுசா இருக்கீங்க?’ன்னு சீண்டி இருக்காங்க. அதுக்கு மேல அவனால வாய மூடிட்டு இருக்க முடியல. ’நாங்க எல்லாரும் எங்க அப்பனுக்குத்தாண்டா பொறந்தோம்’னு ஆத்திரத்தோட கத்திருக்கான். அப்படியும் விடாம அந்தப் பிஞ்சு மனச கொத்திக் கொத்தி அவன மனநோயாளியாவே மாத்திட்டாங்க’’ கலங்கிப்போன கதிர், தொடர்ந்து பேசினார்..

’’ஸ்கூலுக்குப் போனா பசங்க கிண்டல் பண்ணுவாங்களேங்கிற நடுக்கம் அவனுக்கு. அதனால, நாலு மாசமா வீட்டுக்குள்ளேயே புத்தக பை மேலேயே முடங்கிப் படுத்துட்டான். ரெண்டு மாசமா குளிக்கக்கூட இல்ல. தன்னையறியாம யூரின் போனதுகூட தெரியாம படுத்திருந்திருக்கான். ’ஏண்டா கந்தக்குமார் ஸ்கூலுக்கு வரலைன்னு ஆசிரியர்கள் கேட்டதுக்கு, ‘அவனுக்கு என்னவோ ஆயிருச்சு சார். வீட்ட விட்டு வெளியில வரவே இல்ல’ன்னு மத்த பசங்க சொல்லிருக்காங்க.

இதைக் கேட்டுட்டு ஆசிரியர்கள் பாலச்சந்திரனும் சேகரும் எங்களுக்கு தகவல் குடுத்தாங்க. அவன கூட்டிட்டு வந்து மனநல மருத்துவரிடம் கவுன்சலிங் குடுத்தோம். ‘எனக்கு டி.என்.ஏ. டெஸ்ட்கூட எடுத்துப் பாருங்க சார்’னு அவன் சொன்னதக் கேட்டப்ப ரொம்பப் பரிதாபமா இருந்துச்சு . ‘இனிமே புள்ள பெத்தீனா ஒன்னைய கொலை பண்ணிருவேன்’னு அம்மாவைப் பாத்து பல்லைக் கடிக்கிறான். வேற ஸ்கூல்ல சேர்த்து படிக்க வைக்கலாம்னு நாங்க பேசுனப்ப, ‘அதெல்லாம் வேணாம் சார். எல்லாரையும் தொட்டுப் பேசலாம்னுதான் கலெக்டராவேன்னு சொன்னேன். எங்க சாரு தான் என்னைய தொட்டு கைகுடுத்துட்டாருல்ல’னு அவன் சொன்னப்ப, இந்த சமூகம் அவன எவ்வளவு கேவலமா நடத்தி இருக்குன்னு புரிஞ்சிக்க முடிஞ்சுது.

அக்கம் பக்கத்துக்காரங்க எல்லாம், ‘மொதல்ல இவங்கள பிடிச்சு உள்ள போடுங்க சார்’னு மதுரை வீரனையும் அவரு பொண்டாட்டியையும் கைகாட்டுறாங்க. தன்னோட ரெண்டு பசங்கள பத்தாயிரம் ரூபாய்க்கு மும்பையில முறுக்கு கம்பெனிக்காரனுக்கு கொத்தடிமையா அனுப்பி வைச்சிருக்காரு மதுரை வீரன். அவனுக்கு இப்போதைக்கு தேவை நல்ல கவுன்சலிங். அதுக்கு ஏற்பாடு செய்துருக்கோம். மனநல மருத்துவரோட ஆலோசனைப்படி அவனை குணப்படுத்திருவோம்’’ - நம்பிக்கை துளிர்க்க பேசினார் கதிர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x