

கீழ்ப்பாக்கத்தில் நடந்த கட்டிட விபத்தை தொடர்ந்து இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டிடங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு, ஒரு பழங்கால கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. 60 ஆண்டுகள் பழமையான அந்த இருமாடி கட்டிடத்தின் மேல்தளம் மற்றும் முதல் தளங்களில் விரிசல் ஏற்பட் டிருந்ததால், அதன் உரிமையாளர் அந்த இடங்களைப் பயன்படுத்தாமல் பூட்டியே வைத்திருந்தார். தரைத் தளத்தில் மட்டும் 4 கடைகளை வாடகைக்கு விட்டிருந்தார். அந்தக் கட்டிடத்தின் பின்புறத்தில் உரிமையாளரும் அவரது குடும்பத்தினரும் வசித்து வந்தனர்.
விபத்து நிகழ்ந்தபோது, அனை வரும் தூங்கிக்கொண்டிருந்தனர். கட்டிடத்தின் இடிபாடுகள், உரிமையாளர் தங்கியிருந்த வீ்ட்டின் மீது விழாமல், நுழைவுவாயில் அருகில் விழுந்ததால் அதிர்ஷ்ட வசமாக அனைவரும் உயிர்தப்பினர். இந்த விபத்து பகல் நேரத்தில் ஏற்பட்டிருந்தால் பலர் உயிரிழந்திருப்பார்கள்.
மவுலிவாக்கம் விபத்து நிகழ்ந்த சுவடே மறையாத நிலையில், கீழ்ப்பாக்கம் கட்டிட விபத்துச் சம்பவம் அரசுக்கு ஒரு எச்சரிக்கை மணி போல் அமைந்துள்ளது. இனிவரும் காலத்தில் பெரும் விபத்து நிகழ்ந்தபிறகு வருத்தப்படுவதைக் காட்டிலும், முன்கூட்டியே தமிழக அரசு, குறிப்பாக, சென்னை மாநகராட்சி விழித்துக் கொள்ளவேண்டும்.
கடந்த 2012-ம் ஆண்டில் சென்னை திருவல்லிக்கேணியில் 50 ஆண்டு பழமை வாய்ந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பழமையான கட்டிடங்களைக் கணக்கெடுக்க மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. அவற்றின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து, அந்த கட்டிடங்களை இடிக்கவோ, பழுதுபார்க்கவோ உத்தரவிடவேண்டுமென மாநகராட்சி திட்டமிட்டிருந்தது. ஆனால், அதன்பிறகு, அத்திட்டம் என்ன ஆனது என்று தெரியவில்லை.
தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன்பு ‘தி இந்து’வில் தி.நகரில் உள்ள பழைய கட்டிடங்களைப் பற்றியும், அந்தக் கட்டிடங்களால் அங்கு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் பற்றியும் செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில் கீழ்ப்பாக்கம் விபத்து நடந்துள்ளது.
சமூக வலைத்தளம் மூலமாக பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துவருபவரும், இந்தியாவில் பேரிடர் விபத்துக்காலங்களின்போது ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசகராக செயல்படுபவருமான வி.ஆர்.ஹரிபாலாஜி இதுபற்றி கூறும்போது, “சென்னையில் மழை காரணமாக பழமையான கட்டிடங்களில் நீ்ர் ஊடுருவி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன. சென்னை மாநகராட்சி, பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்புத்துறையினர் துரிதமாக செயல்பட்டு அது போன்ற கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுத்து, உயிரிழப்புகள் நிகழாவண்ணம் தடுத்து நிறுத்தவேண்டும்” என்றார். இதுவே பொதுமக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.
சென்னையில் ஆபத்தான நிலையில் உள்ள பழங்கால கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று மேயர் சைதை துரைசாமியிடம் கேட்டபோது, “அது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் அது பற்றிய தெரியப்படுத்தப்படும் என்றும் கூறினார்.