Published : 31 Mar 2017 11:54 AM
Last Updated : 31 Mar 2017 11:54 AM

தமிழகத்தை புறக்கணித்து வஞ்சகம் செய்கிறது மத்திய அரசு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாடல்

மத்திய அரசு வழக்கம் போல் தமிழகத்தை புறக்கணித்து வஞ்சகம் செய்கின்றது என்று சாடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

வரலாறு காணாத வறட்சியின் காரணமாக தமிழ்நாட்டில் விவசாயப் பயிர்கள் கருகிப் போயின. அணைகள் வறண்டு போய்விட்டன. குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத அவலம் தமிழகம் எங்கும் உள்ளது. விவசாயிகள் 300 க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டும் அதிர்ச்சியாலும் மரணமடைந்துள்ளனர். நிலமற்ற கூலி விவசாயத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி வேலை தேடி வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்கள், நகரங்கள் என இடம் பெயர்ந்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டை வறட்சியால் பாதித்த மாநிலம் என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்து அரசிதழில் வெளியிட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணங்களில் விவசாயத் தொழிலாளர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணம் மிகக்குறைந்த தொகையாகும். அத்தொகையும் மத்திய அரசை காரணம் காட்டி, ஐந்து ஏக்கருக்கு மேல் நிவாரணம் கிடையாது என்று அறிவித்துள்ளது. மேலும், விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை ரத்து செய்யாமல் மத்திய கால கடனாக மாற்றியிருப்பதால் எவ்வித பயனும் இல்லை.

மத்திய அரசு வழக்கம் போல் தமிழகத்தை புறக்கணித்து வஞ்சகம் செய்கின்றது. தமிழ்நாடு அரசு வார்தா புயல் மற்றும் வறட்சிக்காக ரூ 62,138 கோடி கோரியது, ஆனால் மத்திய அரசு வெறும் ரூ 2014.45 கோடியை அனுமதித்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. விவசாயிகள் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வலியுறுத்தி தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் அய்யாகண்ணு தலைமையில் கடந்த 18 தினங்களாக தலைநகர் டெல்லியில் போராடி வருகின்றார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் - இளைஞர்கள் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பல்வேறு விவசாய சங்க அமைப்புகளும், விவசாயிகளும் தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர். இந்நிலையில் அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுத்திட வாய்ப்பாக வரும் 03-04-2017 அன்று முழு வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு திரு.தெய்வசிகாமணி தலைமையிலான தமிழ்நாடு விவசாயிகள் ஒருங்கிணைப்பு அமைப்பு மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக வேலை நிறுத்த போராட்டத்திற்கு அரசியல் கட்சிகளும், வணிக அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஏப்ரல் 3ம் தேதி நடைபெறக் கூடிய முழுவேலை நிறுத்த போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிய தனது முழு ஆதரவையும் தெரிவிப்பதுடன், அனைத்து அரசியல் கட்சிகள் - அமைப்புகள் - வணிகர் சங்க அமைப்புகள் - மாணவர்கள் - இளைஞர்கள் அனைவரும் ஒன்றுபட்டு விவசாயிகள் போராட்டத்தை வெற்றியடையச் செய்வதன் மூலமாக விவசாயிகளுக்கு இழைக்கப்பட்டு வரும் துரோகங்களுக்கு முடிவு கட்ட முன்வர வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள், ஆதரவளித்துள்ள அரசியல் கட்சிகள்- விவசாயசங்க அமைப்புகள் - வணிகர் சங்க நிறுவனங்கள் - மாணவர்கள் - இளைஞர்;களுடன் இணைந்து வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றியடையச் செய்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x