

வீடியோ ஆதாரங்கள் கிடைத்த நிலையிலும் டாக்டர் சுப்பையாவை கொலை செய்தவர்களை பிடிக்க முடியாமல் காவல் துறையினர் திணறி வருகின்றனர்.
சென்னை துரைப்பாக்கம் குமரன்குடில் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் சுப்பையா (58). சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் நரம்பியல் மருத்துவராக பணி புரிந்த இவர், சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். பின்னர் அபிராமபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த மாதம் 14 ம் தேதி மருத்துவ மனையில் இருந்து வெளியே வந்த டாக்டர் சுப்பையாவை 2 பேர் சரமாரியாக வெட்டினர். 27 வெட்டுகளுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் 22ம் தேதி நள்ளிரவு உயிர் இழந்தார்.
டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் பொன்னுசாமி, அவரது தாய் அன்னபழம், மனைவி மேரி புஷ்பா, மகன்கள் வழக்கறிஞர் பாசில், போரிஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சரண் அடைந்த வழக்கறிஞர் பாசில், அவரது சகோதரர் போரிஸ் இருவரையும் போலீசார் 7 நாள் காவலில் வைத்து விசாரித்தனர். பாசில், போரிஸ் இருவரிடமும் கோட்டூர்புரம், அபிராமபுரம், ஐசிஎப், செம்மஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர்கள், துணை ஆணையாளர் லட்சுமி என பல அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதிகாரிகளிடம், ‘எங்களுக்கும் கொலைக்கும் சம்பந்தமே கிடை யாது. கொலை நடந்தபோது நாங்கள் சென்னையிலேயே இல்லை’ என்று அவர்கள் கூறினர். வழக்குக்கு சாதகமாக எந்த தகவலையும் அவர்களிடம் இருந்து காவல் துறை யினரால் பெற முடியவில்லை.
அபிராமபுரத்தில் மருத்துவ மனையில் இருந்து வெளியே வரும் டாக்டர் சுப்பையாவை கொலை செய்யும் வீடியோ காட்சிகள், மிகப் பெரிய ஆதாரமாக காவல் துறையினருக்கு கிடைத்தது. கொலை செய்தவர்களின் உரு வங்கள் கூட அதில் தெளிவாக பதிவாகியுள்ளன. ஆனாலும், கொலையாளிகளைப் பிடிக்க முடியாமல் காவல் துறையினர் இன்னும் திணறி வருகின்றனர். கொலையாளிகளைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினரும் சென்னையிலேயே சுற்றி வரு கின்றனர். டாக்டர் சுப்பையாவை கொலை செய்தவர்களில் ஒருவர் பெயர் ஏசுராஜ் என்றும், அவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் காவல் துறையினர் கூறினர். ஆனால் அடையாளம் காணப்பட்ட அவரைக் கூட காவல் துறையினரால் பிடிக்க முடியவில்லை.