

சென்னை விமான நிலையத்தில் மேற்கூரை உடைந்து விழுந்தது. விமான நிலையத்தில் 27-வது முறையாக விபத்து நடந்துள்ளது.
சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையம் சுமார் ரூ.2 ஆயிரம் கோடியில் விரிவாக்கம் செய்து 2 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விமான நிலையத்தில் கண்ணாடி, கிரானைட் கற்கள் உடைந்து விழுவது தொடர்கதையாக உள்ளது. புதிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களில் மேற்கூரைகள் 9 முறையும், லிப்ட் தடுப்பு அறையில் இருந்த கிரானைட் கற்கள் 3 முறையும், தடுப்பு கண்ணாடிகள் 11 முறையும், கதவு கண்ணாடிகள் 2 முறை என மொத்தம் 25 முறை உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த வாரம் 26-வது முறையாக பன்னாட்டு முனையத்தில் வருகை பகுதியில் உள்ள கேட் எண் 12 க்கும், 13 க்கும் இடையே இருந்த கண்ணாடிகள் உடைந்து விழுந்தது.
இந்நிலையில், விமான நிலையத்தின் பன்னாட்டு முனையத்தில் 17-வது நுழைவுவாயிலில் அமைந்துள்ள ஏரோ பிரிட்ஜின் மேற்கூரையில் அமைக்கப்பட்டு இருந்த பால்ஸ் சீலிங் நேற்று காலை 6 மணி அளவில் உடைந்து கீழே விழுந்தது. அந்த நேரத்தில் பயணிகள் யாரும் அங்கு வராததால் பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. காலை 7.30 மணி அளவில் மொரீஷீயசில் இருந்து சென்னைக்கு 246 பயணிகள், அந்த வழியாக வர இருந்தனர். மேற்கூரை பால்ஸ் சீலிங் முன்கூட்டியே உடைந்து விழுந்ததால், அந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.