

தமிழகத்தில் வறட்சி குறித்து மாநில அரசு நடத்தும் ஆய்வுப் பணி காலதாமதமான நடவடிக்கை என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மன்னார்குடி ரெங்கநாதன், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகளை மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று சந்தித்துப் பேசினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை கர்நாடக அரசு மதிக்கவில்லை. காவிரி பிரச்சினையை முன்வைத்து அங்கு உள்ள அரசு கலைக்கப்பட்டு, மக்களின் அனுதாபத்தால் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதிலேயே காங்கிரஸ் கட்சி குறியாக உள்ளது.
காவிரி டெல்டாவில் கடந்த 2 மாதங்களில் வறட்சி பாதித்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அதுவரை தமிழக அரசு என்ன செய்துகொண்டு இருந்தது. தற்போது தமிழகத்தில் வறட்சி குறித்து மாநில அரசு நடத்தும் ஆய்வுப் பணி மிகவும் காலதாமதமான நடவடிக்கையாகும். மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவது பற்றி, தமிழக அரசின் அறிக்கை வந்த பிறகு முடிவு செய்யப்படும்.
ஜல்லிக்கட்டு வழக்கு நீதிமன்றத்தில் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த ஆண்டு உறுதியாக ஜல்லிக்கட்டு நடத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஜெயலலிதா ஆதரிக்காத மத்திய அரசின் திட்டங்களை, தற்போதைய மாநில அரசு மனம் மாறி ஆதரிப்பதை விமர் சிக்கத் தேவையில்லை என்றார்.
தொடர்ந்து வறட்சி பாதித்து உயிரிழந்த ஆதிச்சபுரம் விவசாயி அழகேசன், ரங்கநாதபுரம் விவசாயி கணேசன் ஆகியோரின் வீட்டுக்குச் சென்று அவர்களது குடும்பத்தின ருக்கு அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் ஆறுதல் கூறினார்.