

ஆவின் பால் கலப்படத்தைத் தடுக்க டேங்கரில் ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத்தப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் பி.வி.ரமணா கூறியுள்ளார்.
இதுகுறித்து நேற்று அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பால் மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை அமைச்சர் பி.வி. ரமணா தலைமையில், பால் கொள்முதல் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை அதிகரிப்பது சம்பந்தமாக மாவட்ட ஒன்றியங்களின் பொது மேலாளர்கள் மற்றும் துணைப் பதிவாளர்கள் (பால்வளம்) ஆகியோருடனான ஆய்வுக் கூட்டம் மாதவரத்தில் நேற்று நடைபெற்றது.
குறித்த காலத்தில் பண பட்டுவாடா
இதில் பால் வளத்தைப் பெருக்கவும் பால் கொள்முதலை அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது பற்றியும், பால் உற்பத்தியாளர்களுக்கு குறித்த காலத்தில் பணம் வழங்குவதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
பால் டேங்கர்களில் கலப்படம் செய்வதைத் தடுக்க ஆவின் நிறுவனம் உயர் அதிகாரிகள் அடங்கிய சோதனை குழுக்களை அமைத்து திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பால் எடுத்து வரும் வாகனங்களை வரும் வழியில் சோதனை செய்வது, மேலும் பால் டேங்கரில் புதிய முறையிலான முத்திரைகளைப் பயன்படுத்துவது, ஜி.பி.ஆர்.எஸ். கருவிகள் பொருத்துவது ஆகியவை பற்றியும் ஆலோசிக்கப்பட்டு இதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அமைச்சர் ஆலோசனை கூறினார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.