

பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் இன்று முதல் (புதன்கிழமை) ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கும் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் பிளஸ் 2 தேர்வெழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் ஜூன் 1 (இன்று) காலை 10 மணி முதல் >scan.tndge.in என்ற இணையதளத்தில் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அப்போது தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட வேண்டும்.
விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் அதற்குரிய விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பத்தை 2 நகல்கள் எடுத்து ஜூன் 3, 4-ம் தேதிகளில் மாலை 5 மணிக்குள் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.