Published : 29 Oct 2014 06:50 PM
Last Updated : 29 Oct 2014 08:47 PM
கங்கை நதியை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க பசுமை தீர்ப்பாயத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அந்தத் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
மேலும் மத்திய அரசும், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் தவறு செய்யும் தொழிற்சாலைகளை தண்டிக்காமல் இருப்பதையும் சுட்டிக் காட்டி உச்ச நீதிமன்றம் கடுமை காட்டியுள்ளது.
பணபலமும் அரசியல் செல்வாக்கும் மிகுந்த அத்தகைய தொழிற்சாலைகள் மீது மாசுகட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளது.
கங்கை நதியின் தற்போதைய மாசு அளவை கருத்தில் கொண்ட நீதிமன்றம், மாசு படுத்தும் தொழிற்சாலைகளை உடனடியாக மூட ஏன் உத்தரவிடக்கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளது.
மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்கத் தவறியதால், பசுமைத் தீர்ப்பாயம்தான் நடவடிக்கை எடுக்க முனைப்பு காட்ட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தாக்கூர், கே.கோயல், ஆர்.பானுமதி ஆகியோர் கூறும்போது, “இது நிறுவனம் சார்ந்த தோல்வி, உங்கள் கதை தோல்வியின், வெறுப்பின், சீரழிவின் கதை. மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராக நீங்கள் செயல்பட்டிருக்க வேண்டும். கங்கையை தூய்மைப் படுத்தும் பணியை உங்களிடத்தில் ஒப்படைத்தால் இன்னும் 50 ஆண்டுகள் ஆகும்.
இது குறித்து நீதிமன்றத்தின் தலையீடும், அதன் நீடித்த முயற்சிகளும் எந்த விதப் பலனையும் அளிக்கவில்லை என்பதைக் கூறுவதற்கு நாங்கள் வருந்துகிறோம்.
எனவே கங்கை நதியின் தூய்மையைக் காப்பது எங்கள் கடமை. கங்கை நதி மக்களின் மதம் மற்றும் ஆன்மீக உணர்வின் முக்கியத்துவம் மட்டுமல்ல அது மக்களின் வாழ்வாதாரம் என்று கூறிக்கொண்டேயிருப்பதில் எந்த வித பயனும் இல்லை” என்று வேதனையுடன் கூறியுள்ளனர்.
மேலும், பசுமைத் தீர்ப்பாயம் நதியின் நிலவரம் குறித்தும், மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மீதான நடவடிக்கைகள் குறித்தும் 6 மாதத்திற்கு ஒரு முறை அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு அடுத்த விசாரணையை டிசம்பர் 10ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.