

ஆயுத பூஜையை முன்னிட்டு, பழங்கள், பூக்கள், பூசணிக்காய்கள், வாழைக் கன்றுகள், பொரி உள்ளிட்ட பூஜை பொருட்கள் கோயம்பேடு சந்தையில் குவியத் தொடங்கி உள்ளன. பூக்களின் விலை 4 மடங்கு அதிகரித்துள்ளது.
வரும் ஞாயிறன்று ஆயுத பூஜை. இவ்விழா வீடுகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவுக்குத் தேவையான பழங்கள், பூக்கள், பூசணிக்காய்கள், வாழைக் கன்றுகள், பொரி உள்ளிட்ட பூஜை பொருட்கள் கோயம்பேடு சந்தையில் குவியத் தொடங்கி உள்ளன.
வியாழக்கிழமை திடீரென்று மழை கொட்டியதால் பழங்கள், பூசணிக்காய், வாழைக் கன்றுகள் விற்பனை மந்தமாக இருந்தது. இதனால், அப்பொருட்களின் விலையில், அதிக வித்தியாசம் இல்லை. ஆனால், பூக்கள் விலை மட்டும் எகிறியது.
இதுகுறித்து சென்னை பழ கமிஷன் ஏஜென்ட் சங்க தலைவர் சீனிவாசன் தெரிவித்ததாவது:
ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு சந்தைக்கு, ஆந்திரா, ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பழ வாகனங்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட இரு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, 150 டன் வந்த சாத்துக்குடி, தற்போது 500 டன் வந்துகொண்டிருக்கிறது.
கடந்த வாரம் மொத்த விலையில் கிலோ ரூ.15 முதல் ரூ.18 வரை விற்ற சாத்துக்குடி தற்போது ரூ.20 முதல் ரூ.25 வரை விற்கிறது. 2 வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.70 முதல், ரூ.100 வரை விற்ற ஆப்பிள் தற்போது ரூ. 90 முதல், ரூ. 100 வரை விற்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாழைக் கன்று, பூசணிக்காய் மற்றும் பொரி விற்பனையாளர்கள் தெரிவித்ததாவது:
சென்ற ஆண்டு 10 கன்றுகள் கொண்ட ஒரு வாழைக் கன்று கட்டு ரூ.100 முதல் ரூ. 150 வரை விற்றது. இது தற்போது ரூ.50 முதல் ரூ.60 வரை மட்டுமே விற்கிறது. சென்ற ஆண்டு ரூ.13க்கு விற்ற பூசணிக்காய் ரூ.8 ஆகவும், படி ரூ.20க்கு விற்ற பொரி ரூ.10 ஆகவும் குறைந்துள்ளது. மழை உள்ளிட்ட காரணங்களால் விற்பனை சூடு பிடிக்காததால்தான் பொருட்கள் விலை கடுமையாகக் குறைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கோயம்பேடு பூக்கள் வியாபாரிகள் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்ததாவது:
நவராத்திரி விழா, ஆயுத பூஜைக்குத் தேவையான பொருட்களில் முதன்மை இடம் பிடித்துள்ளது பூக்கள். பூக்கள் விலை கடந்த 4-ம் தேதி வரை விற்றதைவிட தற்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 4-ம் தேதி கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை விற்ற கனகாம்பரம் தற்போது ரூ.800க்கும், ரூ.60 முதல் ரூ.80 வரை விற்ற மல்லி ரூ.500க்கும், ரூ.80 முதல் ரூ.100 வரை விற்ற சாமந்தி ரூ.120 முதல், ரூ.160 வரையும், ரூ.60 க்கு விற்ற முல்லை ரூ.300 க்கும் விற்கிறது.