Published : 03 May 2017 09:52 AM
Last Updated : 03 May 2017 09:52 AM

350 ஆண்டு பழமையான சேதுபதி மன்னரின் திருவாழிக்கல்: ராமநாதபுரம் அருகே ஆவணப்படுத்திய அரசுப் பள்ளி மாணவர்கள்

350 ஆண்டுகளுக்கு முன்னர் திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலுக்கு நிலதானம் வழங்கிய சேதுபதி மன்னரின் திருவாழிக்கல்லை ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் ஆவணப்படுத்தி யுள்ளனர்.

மன்னர்கள் காலத்தில் வழி பாட்டுத்தலங்களில் தினசரி வழி பாடு நடைபெறவேண்டி, அவ் வழிபாட்டுத்தலங்களுக்கு நிலங்களை வரிநீக்கி தானமாக வழங்குவார்கள். அவ்வகையில் சிவன் கோயிலுக்கு வழங்கும் நிலதானம் தேவதானம் என்றும், திருமால் கோயில்களுக்கு வழங்குவது திருவிடையாட்டம் என்றும், சமண, புத்த பள்ளிகளுக்கு வழங்குவது பள்ளிச் சந்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

இவ்வாறு தானமாக வழங்கும் நிலங்களின் நான்கு எல்லைகளிலும் எல்லைக்கற்கள் நடப்பட்டு கோயில் நிலங்கள் பாதுகாக்கப்படும். சிவன் கோயிலுக்கு வழங்கும் நிலங்களின் நான்கு எல்லைகளிலும் திரிசூலம் பொறிக்கப்பட்ட சூலக்கற்களும், திருமால் கோயிலுக்கு வழங்கும் நிலங்களின் எல்லைகளில் சக்கரம் பொறிக்கப்பட்ட திருஆழிக்கல்லும் எல்லைக்கற்களாக நடுவது வழக்கம்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியைய் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வெட்டு, ஓலைச்சுவடி ஆகியவற்றை வாசிக்க, படியெடுக்க ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மையம் பயிற்சி அளித்துள்ளது. இதில் பயிற்சி பெற்ற இப்பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ராஜ்கண்ணா, விசாலி, விஜய், அபர்ணா ஆகியோர் கள ஆய்வின்போது திருப்புல்லாணியில் உள்ள மதகு குட்டத்தின் அருகில் 350 ஆண்டுகள் பழமையான திருவாழிக்கல், சூரிய சந்திர சின்னங்கள், மகரமீன் சிற்பங்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மையத்தின் நிறுவனர் வே.ராஜகுரு கூறியதாவது:

திருவாழிக்கல்

திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில் தெப்பக் குளத்துக்கு அருகில் ஒரு பெரிய குளம் உள்ளது. இதை மதகுகுட்டம் என்கிறார்கள் (குட்டம் என்பது பெரிய அளவிலான குளம் ஆகும்) மழைநீர் மற்றும் பொன்னங்கழிகானல் நீரோடையிலிருந்து இக்குட்டத்துக்கு தண்ணீர் வரும் வரத்துக் கால்வாயில் ஒரு மதகு உள்ளது. அரைவட்ட வடிவில் உள்ள இதன் வலப்பக்கம் பிறையும், இடது பக்கம் சூரியனும் பொறிக்கப்பட்டுள்ளது. மதகின் வெளிப்பகுதி கால்வாயில் சங்கு, சக்கரம், நாமம் பொறிக்கப்பட்ட ஒரு திருவாழிக்கல் நடப்பட்டு உள்ளது. நான்கு அடி உயரம் உள்ள இக்கல்லின் மேல் பகுதி வளைந்து சிகர அமைப்பில் உள்ளது. இதில் உள்ள சக்கரத்தில் எட்டு ஆரங்கள் உள்ளன.

மதகு, கால்வாய், குட்டம் ஆகியவை திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளதால் இந்த திருவாழிக்கல் நடப்பட்டுள்ளது. சூரியர், சந்திரர் இருக்கும்வரை இத்தான தர்மம் நிலைத்திருக்கும் என்ற பொருளில், மதகின் இருபுறமும் சூரியன் மற்றும் பிறைச் சின்னங்கள் உள்ளன.

மகர மீன்கள்

கால்வாயில் இருந்து வரும் தண்ணீர் குட்டத்தின் உள்ளே செல்ல மதகின் நடுவில் தூம்பு உள்ளது. இத்தூம்பின் மேல்பகுதியில் இரு மீன்கள் எதிர் எதிரே இருக்கும் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. இம்மீன்களை மகரமீன்கள் என்கிறார்கள். இதனால் இக்குட்டம் மகரக்குட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. சுறாமீன் களையே மகரமீன்கள் என்பார்கள். பகவத்கீதையில் கிருஷ்ணர் மீன்களில் நான் மகரமீனாக இருக்கிறேன் என்கிறார். இங்குள்ள சிற்பத்தில் உள்ள மீன்களின் பற்கள் மட்டும் சுறாமீன்களைப் போல உள்ளன.

தானம்

சேதுபதி மன்னர்களில் கி.பி.1646 முதல் கி.பி.1676 வரை போகலூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட திருமலை ரெகுநாத சேதுபதி திருப் புல்லாணி கோயில் தெப்பக்குளம் உள்ளிட்ட கட்டுமானங்களைச் செய் தார். இந்த குட்டம், மதகு, கால்வாய் ஆகியவையும் அவரது காலத்திலேயே அமைக்கப்பட்டிருக்கலாம்.

இந்த மதகின் அருகே கல்வெட்டு ஒன்று இருந்து தற்போது அது காணாமல் போயுள்ளதாக பொது மக்கள் தெரிவித்தனர். மதகுகுட்டம் நிரம்பியபின் மீதமுள்ள தண்ணீர் கோயில் தெப்பக்குளத்துக்குச் செல்லும் வகையில் இது அமை க்கப்பட்டுள்ளது, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x