

ஏற்காடு தேர்தல் தோல்வி யைக் கண்டு துவளாமல், எதிர்கால வெற்றிக்கு ஏணிப் படிக்கட்டுகளாக்கிப் பணியாற்ற வேண்டும் என்று தொண்டர்களுக்கு, திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஏற்காடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை நிறுத்த முடிவெடுத்தவுடன், முறைப்படி அதற்கு ஆதரவு கேட்டு, தமிழகத்திலுள்ள பெரும்பாலான கட்சித் தலைவர்களுக்கும் நான் நேரடியாகக் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தில், ஆளுங்கட்சியான அதிமுகவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில், தங்கள் கட்சியின் ஆதரவை வழங்கக் கேட்டிருந்தேன்.
இதற்குக் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் தங்கள் மேலிடத்தைக் கலந்து கொண்டு முடிவு தெரிவிப்பதாகக் கடிதம் எழுதினர். கடைசி வரை ஆதரவைத் தெரிவிக்கவில்லை. மேலும் சிலர் பதிலே தெரிவிக்கவில்லை. ஆனால் திமுகவினர் தேர்தலில் இரவுப் பகல் பாராது அரும்பாடுபட்டனர்.
ஆனால் ஆளுங்கட்சியின் அராஜகம், வாக்குகளுக்காக வாரி வழங்கிய தொகை, அமைச்சர்களின் அதிகாரத்துஷ்பிர யோகங்கள் ஆகியவற்றுக்கு முன்னால் நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை. பெண்ணாகரத்தில் டெபாசிட் இழந்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட அதிமுகதான், தற்போது தமிழகத்தின் ஆளுங்கட்சி. எனவே, இதுபோன்ற தோல்விகளை எதிர்கால வெற்றிக்கு ஏணிப்படிகளாக ஆக்கி கொண்டு, தோல்வியைக் கண்டு துவளாமல், தொடர்ந்து பணியாற்றுவோம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.