

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்த விலைக்குள் தான் மின்சாரம் வாங்க வேண்டு மென்றால் 25 சதவீதம் மின்சார தட்டுப்பாடு ஏற்படும் என்று தமிழக மின் வாரியம் தெரிவித்துள்ளது.
மின்சார வாரியத்தின் சார்பில் நடப்பாண்டில் சுமார் 27 ஆயிரம் கோடி ரூபாய்க்கும், கடந்த ஆண்டில் சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, ‘தி இந்து’வில் கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகின. | படிக்க:>தனியாரிடம் இருந்து ரூ.16,280 கோடிக்கு மின்சாரம் கொள்முதல்: அதிக விலைக்கு வாங்குவதால் மின் வாரியத்துக்கு இழப்பு |
இந்நிலையில், அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவது குறித்து, மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
தமிழக மொத்த மின்சாரத் தேவை ஆண்டுக்கு 91 ஆயிரத்து 642 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சத்தைக் குறிக்கும்) யூனிட்களாகும். சுமார் 34,253 மில்லியன் யூனிட்கள் சொந்த மின் உற்பத்தி மூலமும், 30,534 மில்லியன் யூனிட்கள் மின்சாரம் மத்திய அரசின் மின் நிலையங்கள் மூலமும், 6,082 மில்லியன் யூனிட்கள் மரபுசாரா எரிசக்தி மூலமும் பெறப்படுகின்றன.
மீதமுள்ள மின் தேவையில் 16.28 சதவீதம் நீண்ட கால ஒப்பந்தப்படி, 5,007 மில்லியன் யூனிட், நடுத்தர கால ஒப்பந்தப்படி 3,723 மில்லியன் யூனிட், 6,185 மில்லியன் யூனிட் குறுகிய கால ஒப்பந்தப்படி வாங்கப்படுகிறது. குறைந்த விலை மின் நிலையங்களில் 2,829 மில்லியன் யூனிட்டும், அதிக விலை மின் நிலையங்களில் 2,950 மில்லியன் யூனிட்டும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. தட்டுப்பாட்டைத் தீர்க்கவே ஒழுங்குமுறை ஆணையத்தின் மெரிட் ஆர்டர் டிஸ்பேட்ச் மூலம், அதிக விலை மின்சாரம், 3.22 சதவீதம் கொள்முதல் செய்யப் படுகிறது.
அனைத்து வகை குறைந்த விலை ஆதாரங்களில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்ட பின்பே, இங்குள்ள நீண்ட கால ஒப்பந்தத் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம், மின் தேவையை சமாளிக்கும் பொருட்டு மொத்த மின் தேவையில் வெறும் 3.22 சதவீதம் கொள்முதல் செய்யப்படுகிறது. குறைந்த விலை ஆதாரங்களில் மின்சாரம் கிடைக்கும்போது, இந்த அதிக விலை மின்சாரம் வாங்கப்படுவதில்லை.
1992-ம் ஆண்டு மத்திய அரசால் உருவாக்கப்பட்ட தனியார் மின் உற்பத்தியாளர்களை ஊக்கு விக்கும் கொள்கைப்படி, 1996 முதல் 1999 வரை 7 தனியார் மின் உற்பத்தியாளர்களிடம், மின்சாரம் கொள்முதல் செய் யப்பட்டது. இந்த நிறுவனங்களின் எரிபொருள்கள் அதிக விலையானதால், மின்சார கொள்முதல் விலை ரூ.12.50 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்த விலை யான யூனிட்டுக்கு ரூ.3.50-க்கு வாங்கினால், மொத்த மின் தேவையில் வெறும் 9,800 மெகா வாட் (75 சதவீதம்) அளவுக்கே மின் விநியோகம் செய்ய முடியும். மீதமுள்ள தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் மின் தடை செய்ய வேண்டியிருக்கும்.
தமிழக மக்களுக்கு ஏற்படும் இடர்ப்பாடுகளை கருத்தில் கொண்டே, மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.