

தேசிய ஊரக குடிநீர் திட்டத்துக்காக மத்திய அரசு விடுத்த நிதி முழுமையாக பயன்படுத்தப்படுகிறது என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று அவர் தனது பதிலுரையில் கூறியதாவது:
கடந்த 2011-12ல் கிராமப்புற குடிநீர் திட்டத்துக்காக மத்திய அரசு வழங்கிய நிதியை சரிவர பயன்படுத்தாததால், அடுத்த ஆண்டுக்கான நிதி வழங்கப்படவில்லை என துரைமுருகன் கூறியுள்ளார். ஆனால் 2011-12ல் தேசிய ஊரக குடிநீர் திட்டப் பணிகளுக்காக வழங்கப்பட்ட நிதியில் 60 சதவீதத்துக்கு மேல் பயன்படுத்தி திட்டங்களை செயல்படுத்தியதால், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ரூ.168.77 கோடி ஊக்கத் தொகையாகவும், இயற்கை இடர்பாட்டு நிதியாகவும் கூடுதலாக பெறப்பட்டது.
கூடுதல் நிதி
தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின் செயல்பாடு குறித்து மாநிலங்களுக்கு இடையிலான தரவரிசையை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு வெளியிடுகிறது. அதில் 2011-12ம் ஆண்டு தமிழகம் முதலிடம் வகித்தது. இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு விடுவித்த நிதியை முழுமையாகப் பயன்படுத்தியதுடன் கூடுதல் நிதி பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை இத்திட்டத்தில் விடுவித்த தொகை செலவழிக்கப்படாமல் இருந்ததில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.