ஜெ. விடுதலையாக வேண்டி 1006 பேர் மொட்டை: சேலம் அதிமுகவினர் கோயிலில் வேண்டுதல்

ஜெ. விடுதலையாக வேண்டி 1006 பேர் மொட்டை: சேலம் அதிமுகவினர் கோயிலில் வேண்டுதல்

Published on

சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்தர் கோயிலில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி 1006 பேர் மொட்டையடித்து சுவாமியை வழிபட்டனர்.

சேலம் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சித்தர்கள் வாழ்ந்த இடமாக சித்தர் கோயில் விளங்குகிறது. கஞ்சமலையில் உள்ள இந்த கோயிலில் மூலவராக சித்தேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு காளியம்மன் சன்னதி, மலையின் மேல் முருகன் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.

இந்த கோயிலில் நேற்று காலை 8 மணி முதல் அதிமுக தொண்டர்கள் திரண்டு வந்தனர். மெயின் ரோட்டில் இருந்து கோயிலின் சன்னதி வரை நீண்ட வரிசையில் நின்று அவர்கள் தாங்களாகவே முன்வந்து முன் ஜெயலலிதா விடுதலையாக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு மொட்டை போட்டனர்.

சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வீரபாண்டி ஒன்றியத்தலைவர் வரதராஜ், பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், சேலம் ஒன்றிய செயலாளர் வையாபுரி, பனமரத்துப்பட்டி ஒன்றிய தலைவர் லட்சுமி வெங்கடாஜலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆரம்பத்தில் 500 பேர் மொட்டையடித்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.

பின், தகவல் கிடைத்த அதிமுக தொண்டர்கள் திரளாக சித்தர் கோயில் நோக்கி வந்த வண்ணம் இருந்தனர். பகல் 11 மணியளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கு குவிந்தனர். நேரம் செல்ல செல்ல மொட்டையடித்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது. மதியம் 12 மணி வரை 1006 பேர் மொட்டையடித்துக் கொண்டனர். ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் சித்தேஸ்வரர் சன்னதிக்கு சென்று சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in