

தெற்காசிய செயற்கைக் கோள் எனப்படும் ‘ஜிசாட் 9’, ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து இன்று மாலை ஜிஎஸ்எல்வி - எஃப்09 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத் தப்பட உள்ளது. இதற்கான 28 மணிநேர கவுன்ட்-டவுன் நேற்று மதியம் தொடங்கியது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையம் உள்ளது. இதன் 2-வது ஏவுதளத் தில் இருந்து ஜிஎஸ்எல்வி - எஃப்09 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இது ஜிஎஸ்எல்வி வரிசையில் 11-வது ராக்கெட், கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் செயல்படும் 4-வது ராக்கெட் ஆகும்.
இதன்மூலம் ‘ஜிசாட் 9’ செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. தகவல் தொடர்புக்கு உதவும் இந்த செயற்கைக் கோள், ஜியோ-ஸ்டேஷனரி வகையைச் சேர்ந்தது. தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு மேல் விண்வெளியில் செயல்படும் வகையில் ரூ.450 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 2,230 கிலோ எடை கொண்டது.
தெற்காசிய நாடுகளில் ஏற் படும் இயற்கைப் பேரிடர்கள் தொடர்பான தகவல்களை முன் கூட்டியே அறிந்துகொள்ள இது உதவும். பாகிஸ்தான் தவிர்த்து பிற தெற்காசிய நாடுகள் இதனால் பயன்பெறும். தெற்காசிய நாடு களுடனான இந்தியாவின் நட்பு இதன்மூலம் மேலும் வலுப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பகுதியின் வளர்ச்சிக்கு இந்த செயற்கைக் கோள் உதவிபுரியும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஜிஎஸ்எல்வி - எஃப்09 ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி நேற்று முன்தினம் முடிந்தது. இதையடுத்து, ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 28 மணிநேர கவுன்ட்-டவுன் நேற்று மதியம் 12.57 மணிக்குத் தொடங்கியது. கவுன்ட்-டவுன் முடிந்து இன்று மாலை 4.57 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது.