

வட்டாட்சியர் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை
திருச்சி சிந்தாமணி அந்தோனியார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மனைவி ஜோஸ்பின். இவர்கள் ஆரணியில் வசிக்கின்றனர். இவர் களது மகன் சந்தோஷ்குமார், சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்துவிட்டு, பயிற்சி மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.
மே 15-ம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள ஏ.ஆர்.எச்.டி என்ற தனியார் மையத்தில் சந்தோஷ்குமாரின் தலையில் செயற்கை முடிகள் பொருத்தப்பட்டன. இதன் பின்னர் சந்தோஷ்குமாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு, கால்கள் செயலிழந் ததால் அவரை வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 17-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை திருச்சி மலைக் கோட்டை பகுதியில் உள்ள கல்ல றைத் தோட்டத்தில் அடக்கம் செய் தனர்.
முடி மாற்று சிகிச்சையின்போது, அதிக அளவில் மயக்க மருந்து அளித்ததுதான், சந்தோஷ்குமார் இறப்புக்கு காரணம் என தெரிய வந்தது. இதுகுறித்து சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர், கடந்த 4-ம் தேதி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.
இதையொட்டி, திருச்சியில் அடக்கம் செய்யப்பட்ட சந்தோஷ் குமாரின் உடல் நேற்று மாலை தோண்டி எடுக்கப்பட்டது. வட்டாட்சியர் சிவசங்கரன், விஏஓ நரசிம்மன், நுங்கம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பர பாரதி மற்றும் பெற்றோர் முன்னிலையில், திருச்சி அரசு மருத்துவமனை மருத் துவர் சரவணகுமார் தலைமை யிலான குழுவினர், பிரேதப் பரிசோதனை செய்தனர். உடலின் சில பாகங்களை சேகரித்து, ஆய் வுக்காக எடுத்துச் சென்றனர்.
நீதி கிடைக்க வேண்டும்
இதுகுறித்து சந்தோஷ்குமாரின் உறவினர்கள் கூறும்போது, “199.7 கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்று சந்தோஷ்குமார் எம்பிபிஎஸ் சேர்ந்தார். மருத்துவப் படிப்பிலும் தங்கப் பதக்கம் பெற்றார்.
சுமார் ரூ.1.20 லட்சத்துக்கு செய் யப்படும் முடி மாற்று சிகிச்சையை, 50 சதவீத தள்ளுபடியில் செய்வ தாக இணையதளத்தில் வந்த விளம்பரத்தைப் பார்த்து, ரூ.62 ஆயிரம் செலுத்தி 2,500 முடிகளை சிகிச்சை மூலம் பொருத்தியுள்ளார். சிகிச்சையின்போது அதிக அளவு மயக்க மருந்து செலுத்திய மருத்துவர்களின் தவறே சந்தோஷ் குமார் இறப்புக்கு காரணம். இதுபோன்ற போலி மையங்களின் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும்.
சந்தோஷ்குமாரின் உயிரிழப் புக்கு காரணமான தனியார் மையத்தின் கிளைகள், உலகின் பல இடங்களில் செயல்படுகின்றன. அவை அனைத்தையும் மூட மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.