

என்.எஸ்.சி போஸ் சாலையை ஆக்கிரமித்துள்ள நடைபாதைக் கடைகள் அனைத்தையும் அப்புறப் படுத்த வேண்டும் என அதி காரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, சென்னை வியாசர்பாடியை சேர்ந்த எஸ்.ரகு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகரத்தின் முக்கிய பகுதிகளில் ஏராளமான ஓட்டல்கள் உள்ளன. ஒவ்வொரு ஓட்டலுக்கும் தினமும் ஆயிரக்கணக்கான வாடிக் கையாளர்கள் வந்து செல்கின்றனர். ஓட்டல், பார், திரையரங்கம் உள் ளிட்டவை தொடங்குவதற்கு முன்பு சென்னை மாநகர போலீஸ் சட்டத்தின்படி, காவல் ஆணை யரிடமும், சென்னை மாநகராட்சி சட்டத்தின்படி, மாநகராட்சி ஆணை யரிடமும், உரிமம் பெறவேண்டும். இவ்வாறு அனுமதி பெற்று செயல்படும் ஓட்டல்கள், மாநக ராட்சி சட்டத்தின்படி வாகனங்களை நிறுத்தும் இடத்தை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
ஆனால், சென்னை மாநகரில் 15-க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் வாகன நிறுத்தும் இடம் இல்லை. இதனால், சென்னை மாநகரில் பல முக்கிய இடங்களில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனால், விபத்துகளும் நடக்கின்றன. எனவே,வாகனங்கள் நிறுத்தும் இடம், கழிவுநீர் சுத்திகரிப்பு கருவி கள் ஆகியவற்றை அமைக்கும் வரை, இந்த 15 ஓட்டல்களும் செயல் பட தடை விதிக்க வேண்டும். இவ் வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், என்.எஸ்.சி போஸ் சாலையில், ராஜாஜி சாலை முதல் பூக்கடை காவல் நிலையம் வரையிலான சாலைப் பணிகள் முடிவடைந்துவிட்டன. ஆனால், சாலையோர நடை பாதையில் வியாபாரிகள் ஆக்கிர மித்துள்ளனர் என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், “இவ்வாறு நடைபாதைகள் ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, அந்தப் பகுதியில் யாரேனும் ஆக்கிரமித்து கடைகளை வைத்திருந்தால், அதனை அதிகாரிகள் அகற்ற வேண்டும். இந்த உத்தரவை மீறினால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு அதிகாரிகள் உள்ளாக நேரிடும். வழக்கை ஆகஸ்ட் 30-ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம்”. இவ்வாறு நீதிபதி கள் உத்தரவிட்டனர்.