Published : 17 Nov 2013 11:13 AM
Last Updated : 17 Nov 2013 11:13 AM

கொத்தடிமைகள் மறுவாழ்வு வேண்டி சென்னைக்கு பாத யாத்திரை

கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்கக் கோரியும் மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களை அமல்படுத்தக் கோரியும் திருச்சியிலிருந்து சென்னைக்கு பாத யாத்திரை வந்துகொண்டிருக்கிறது அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு.

உலகில் உள்ள கொத்தடிமைத் தொழிலாளர்களில் பாதி பேர் (சுமார் 1.50 கோடி) இந்தியாவில் இருப்பதாக சொல்கிறார்கள். உச்ச நீதிமன்ற ஆணைப்படி நடத்தப்பட்ட ஆய்வின்படி 1996-ல் தமிழகத்தில் மொத்தம் 25 லட்சம் கொத்தடிமைத் தொழிலாளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை இப்போது மேலும் உயர்ந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மீட்கப்படும் கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு உரிய மறுவாழ்வுத் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்துவதில்லை. அதனால் அவர்கள் மீண்டும் மீண்டும் கொத்தடிமைத் தொழிலுக்கே போய்விடுகிறார்கள் என்கிற அதிர்ச்சித் தகவலையும் சொல்கிறார்கள்.

இதற்குத் தீர்வு வேண்டித்தான் பாதயாத்திரை தொடங்கி இருக்கிறது அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு. இந்த அமைப்பின் தேசிய செயலர் கீதா ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

மறுவாழ்வுத் திட்டங்கள் இல்லை

1980ம் ஆண்டு தொடங்கி வடமாநில கல்குவாரிகளிலிருந்து ஆயிரக்கணக் கான கொத்தடிமைத் தொழிலாளர்களை தமிழகத்துக்கு மீட்டு வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்கள் எதுவும் முறையாக செயல்படுத்தப்படாததால் அவர்களில் பலர் மீண்டும் கொத்தடிமைத் தொழிலுக்கே போய்விட்டார்கள். கல்குவாரிகள், செங்கல் சூளைகள், சுமங்கலி திட்டம் என பல வகைகளில் கொத்தடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள் மக்கள்.

விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்கள் சங்கங்களுக்குத்தான் கல்குவாரிகளைக் கொடுக்க வேண்டும் என சிறு கனிமங்கள் சட்டத்தில் இருக்கு. ஆனா, அப்படி யாருக்கும் கொடுப்பதில்லை. பெரிய நிறுவனங்களுக்குதான் கொடுக்கிறார்கள். அவர்கள் ஒரே வருடத்தில் மலைகளை தரைமட்டமாக்கிட்டுப் போயிடுறாங்க.

சான்றுக்கே போராட்டம்

மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு வீடு, ஆடு, மாடுகள், 20 ஆயிரம் ரொக்கம், 2 ஏக்கர் நிலம் இத்தனையும் கொடுக்கணும்னு கொத்தடிமைகள் ஒழிப்புச் சட்டம் 1976-ல் தெளிவா சொல்லிருக்கு. ஆனா, ‘இவர் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டவர்’னு விடுதலைச் சான்று வாங்குறதுக்கே அதிகாரிகளிடம் போராடவேண்டி இருக்கு. பல இடங்களில், கொத்தடிமைகளை மீட்க அதிகாரிகளே அக்கறை காட்டுறதில்லை.

இதையெல்லாம் சுட்டிக்காட்டத்தான் நவம்பர் 7-ம் தேதி திருச்சியிலிருந்து 120 பேர் பாத யாத்திரை தொடங்கி இருக்கிறோம். வழியில் உள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களை சந்தித்து எங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்து வருகிறோம். நவம்பர் 22-ம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் யாத்திரையை நிறைவு செய்துவிட்டு முதல்வரையும் கவர்னரையும் சந்தித்து மனு கொடுக்க இருக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x