

கோயம்பேடு பஸ் நிலையம் அருகே ஓடும் பஸ்ஸில் பயணிகளிடம் கத்தி முனையில் கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரைப் பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு பஸ் நிலையம் எதிரில் அரும்பாக்கம் 100 அடி சாலையில் தனியாருக்கு சொந்தமான ஆம்னி பஸ் நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது. இங்கிருந்து கோவைக்கு செல்வதற்காக ஆம்னி பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் தயார் நிலையில் இருந்தது.
மதுரையைச் சேர்ந்த ஓட்டுநர் ஜோதிராஜ் (58) என்பவர் பஸ்ஸை இயக்குவதற்காக தயாராக இருக்கை யில் அமர்ந்திருந்தார். தூங்கும் வசதி கொண்ட அந்த பஸ்ஸில் பயணிகளும் ஏறி அமர்ந்திருந்தனர். பஸ் புறப்பட தயாரானபோது 5 பேர் வேக வேகமாக பஸ்ஸில் ஏறினர்.
அதில், சிலர் துணியால் முகத்தை மூடியிருந்தனர். அனைவரும் கையில் கத்தி வைத்திருந்தனர். ஒருவர் மட்டும் ஓட்டுநரிடம் சென்று “பஸ்ஸை நான் சொல்லும் இடத்துக்கு ஓட்ட வேண்டும். மீறினாலோ, கத்தினாலோ குத்தி கொலை செய்துவிடுவேன்” என மிரட்டிக் கொண்டிருந்தார்.
இதனால் வேறு வழியின்றி ஓட்டுநர் பஸ்ஸை மெதுவாக இயக் கிக் கொண்டிருந்தார். சிறிது தூரம் சென்றதும் ஓட்டுநர் ஜோதிராஜ் திடீரென பிரேக் போட்டு பஸ்ஸை நிறுத்தினார். அப்போது கத்தியை காட்டி மிரட்டியவர் நிலை தடுமாறினார். உடனே ஜோதிராஜ் கதவை திறந்து வெளியில் குதித்து கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும், அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டுநர்களும் திரண்டனர்.
போலீஸார் விரைந்தனர்
அரும்பாக்கம் ரோந்து போலீ ஸாரும் அங்கு வந்துவிட்டனர். உடனே பஸ்ஸுக்குள் பயணிகளை கத்தி முனையில் மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற அனைவரும் தப்பி ஓடினர். ஒருவர் மட்டும் பிடிபட்டார். அவருக்கு பொது மக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸாரின் விசாரணையில் பிடி பட்டது திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் (24) என்பது தெரிய வந்தது.
தனிப்படை அமைப்பு
அரும்பாக்கம் போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள தினேஷ் மீது வெள்ளவேடு பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் ஒருவரை கொலை செய்த வழக்கு உட்பட பல வழக்கு கள் நிலுவையில் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு ள்ளது.