

வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிக்கு முதல்வர் ஜெயலலிதா நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், வண்ணாரப்பேட்டை- விமான நிலையம், சென்ட்ரல்- பரங்கிமலை என இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், வண்ணாரப்பேட்டை- விமான நிலையம் வழித்தடத்தை, வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர், விம்கோ நகர் வரை விரிவாக்கம் செய்வதற்கு கோரிக்கை எழுந்தது. இத்திட்டத்துக்கான ஒப்புதலை சமீபத்தில் மத்திய அமைச்சரவை அளித்தது. இத்திட்டத்துக்கு ரூ.3 ஆயிரத்து 770 கோடி ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், இத்திட்டத்தை தொடங்குவதற்கான நில ஆர்ஜிதம் உள்ளிட்ட ஆயத்தப்பணிகளை மெட்ரோ ரயில் நிறுவனம் முடித்துள்ளது. இந்த விரிவாக்கத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா நாளை 23-ம் தேதி நடக்கிறது. தண்டை யார்ப்பேட்டை துறைமுக கழக மைதானத்தில் நடக்கும் விழாவில், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார். இந்நிகழ்ச் சியில், மத்திய அமைச்சர்களும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர, மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்கூட்டர் வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்டங்களையும் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்க உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.