

மக்களுக்கு தேமுதிக மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது என்றும், அதற்கு அக்கட்சியின் தலைமை (விஜயகாந்த்) காரணம் என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
முழு நேர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பண்ருட்டி ராமச்சந்திரன் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும், தேமுதிக கட்சிப் பொறுப்புகளையும் ராஜிநாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியது:
அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது என்பது திட்டமிட்ட முடிவுதான். எல்லா துறைகளிலும் ஓய்வு என்பது உண்டு. ஆனால், அரசியலில் கடைசி காலம் வரை இருக்க வேண்டும் என்றும் பலரும் நினைக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை, கட்சிப் பொறுப்போ, சட்டமன்ற உறுப்பினர் பொறுப்போ, அதற்குரிய கடமைகளை நிறைவேற்றக் கூடிய சக்தி உடலில் வேண்டும்.
உடல்நிலை சரியில்லாதததால் சமீபத்தில் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டேன். அப்போது, முழுமையாக ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தினார். எனவேதான் ஓய்வு பெறுவது என கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவு செய்தேன். அன்றைய தினம் தேர்தல் முடிவுகள் வெளியானதால், பின்னர் அறிவிக்கலாம் என்று தீர்மானித்தேன்.
வேறு எந்த நெருக்கடியாலும் விலகல் முடிவை எடுக்கவில்லை. என்னுடைய இந்த முடிவால் யாருக்கும் எந்தப் பின்னடைவும் ஏற்படாது. தேமுதிகவுக்கு எந்தப் பின்னடைவும் ஏற்படாது. 'என்னுடைய கட்சி; நான்தான் நடத்துகிறேன்' என்று விஜயகாந்த் சொல்வார். அதனால், அவருக்கோ அல்லது கட்சிக்கோ எந்தப் பாதிப்பும் இல்லை.
எனது தொகுதியான ஆலந்தூர் மக்களுக்கும் எந்தப் பாதிப்பும் வராது. ஏனெனில், உடல்நிலை சரியில்லாமல் சரியாக இயங்க முடியாததால்தான் ராஜிநாமா செய்துள்ளேன். எனவே, அங்கு மீண்டும் தேர்தல் நடக்கும். மக்கள் நல்ல வேட்பாளரைத் தேர்வு செய்வார்கள்.
டெல்லி தேர்தலில் வாக்குகள் கிடைக்காது என்பதால், போட்டியிட வேண்டாம் என்று கூறினேன். ஆனால், அங்கு போட்டியிடுவது என கட்சித் தலைமை முடிவு செய்தது. அவ்வாறு முடிவு செய்வது தலைமைக்கு உரிமை உண்டு.
மக்களுக்கு ஆரம்ப கட்டத்தில் தேமுதிக மீது நம்பிக்கை மிகுதியாக இருந்தது. ஒரு மாற்று கட்சியாக மக்கள் பார்த்தார்கள்
ஆனால், இப்போது கட்சியின் செயல்பாடுகளால் அந்த நம்பிக்கை குறைந்துவிட்டது. அதற்கு, கட்சியின் தலைமை (விஜயகாந்த்) காரணம்.
நான் இதுவரை பல தலைவர்களுடன் செயலாற்றி இருக்கிறேன். எப்போதும் என்னைக் கவர்ந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.தான்" என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.