

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மக்கள் அதிகாரம் இயக்கத்தின் பிரச்சார பாடகர் கோவனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், "கோவன் அரசுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவதை பழக்கமாக கொண்டுள்ளார். மேலும், விசாரணையில் அவருக்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு இருக்கிறது தெரியவந்துள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த அடிப்படையிலேயே, சென்னை எழும்பூர் பெருநகர நீதிமன்றம் கோவனை இரண்டு நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேவேளையில், கோவன் உயர் நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "கடந்த அக்டோபர் 28-ம் தேதி, குற்றப் பிரிவு போலீஸார் தன் மீது பதிவு செய்த எஃப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கையை) ரத்து செய்ய வேண்டும்" எனக் கோரியுள்ளார்.
அரசியல் உள்நோக்கம்
மேலும், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் அரசியல் உள்நோக்கத்துடன் தான் கைது செய்யப்பட்டிருப்பதாக கோவன் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் குற்றப்பிரிவு போலீஸார் தன்னிச்சையாக நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
கோவன் மனு தொடர்பாக மாநில உள்துறை செயலர், டி.ஜி.பி, போலீஸ் கமிஷனர், குற்றப்பிரிவு போலீஸ் ஆகியோரிடம் விளக்கம் கோரி நீதிபதி ஆர்.சுப்பையா நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
கோவனை, சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் கிரைம் போலீஸார் கடந்த அக்டோபர் 30-ம் தேதி அதிகாலை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மதுவுக்கு எதிராக பாட்டுப் பாடி வந்த இவர் மீது தேசத் துரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கோவனை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை பெருநகர தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கணேசன் உத்தரவிட்டார். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கோவன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டதால், சென்னை கொரட்டூரில் உள்ள நீதிபதி சி.டி.செல்வம் வீட்டில் விசாரணை நடத்தப்பட்டது.
கோவனை 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து கோவன் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கோவன் மனு செய்தார். நவம்பர் 16-ம் தேதியன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆதிநாதன், கோவனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். கோவன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.