

சென்னை அண்ணா சாலையில் கழிவுநீருடன் கலந்து எண்ணெய் கசிவு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் 2 வழித் தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. வண்ணாரப்பேட்டையில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் வரையிலான பாதையில் அண்ணா சாலை வழியாக சைதாப்பேட்டை வரை சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்து டிஎம்எஸ் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நேற்று மதியம் 12 மணி அளவில் அண்ணா சாலையில் எல்ஐசி அருகே கழிவுநீருடன் கலந்து எண்ணெய் கசிவு வெளியானது. இதனால் சுரங்கம் தோண்டும் பணியில் இருந்த ஊழியர்கள் உடனடியாக பணிகளை நிறுத்திவிட்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது, அந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் வழுக்கி விழுந்தனர். இதில் 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த மெட்ரோ ரயில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். மெட்ரோ ரயில் பணிகளால் எதுவும் நடக்கவில்லை. கழிவுநீர் செல்லும் குழாயில் இருந்து எண்ணெய் கசிவுடன் கழிவுகள் வெளியானது தெரியவந்தது.
ஆனால், சம்பந்தப்பட்ட துறையினர் யாரும் உடனடியாக வராததால், மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளே குழாய் அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அண்ணா சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.