

இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று 3 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. கடந்த 6 நாட்களில் இக்கண்காட்சியை மொத்தம் 9 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் 8-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி கடந்த 2-ம் தேதி தொடங்கியது. சுற்றுச் சூழலை பராமரித்தல், பெற் றோர் ஆசிரியர் மற்றும் பெரியோர்களை வணங்குதல், பெண்மையை போற்றுதல், எல்லா ஜீவராசிகளையும் பேணுதல், நாட்டுப்பற்றை உணர்த்துதல், வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாத்தல் என 6 முக்கிய கருத்துகளை வலியுறுத்தி இந்த கண்காட்சி நடத்தப்பட்டது. பண்பு மற்றும் கலாச்சார பயிற்சி முனைவு அறக்கட்டளை மற்றும் இந்து ஆன்மிக மற்றும் சேவை மையம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாத்தல் என்ற கருத்தை முன்வைத்து விருஷ வந்தனம் மற்றும் நாக வந்தனம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இன்டர்நேஷனல் வள்ளலார் பவுண்டேஷன் சார்பில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொருவரும் மரக்கன்று வாங்கும்போது கற்பூரம் ஏற்றி, இறைவனை வழிப்பட்டு வாங்கிச் சென்றனர். இவை கடந்த 4-ம் தேதி நடந்த வள்ளித் திருமணம் நிகழ்ச்சியில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட மரக்கன்றுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
நந்தலாலா சேவா சமிதி அறக்கட்டளை சார்பில் இன்றைய நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சாத்தியமா?, சாத்தியமில்லையா? என்ற தலைப்பில் பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. முனைவர் மஞ்சுளா தியாகராஜன் நடு வராக பங்கேற்றார். பிறகு, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
ஆன்மிகம் என்ற தலைப்பில் ஒளவையார் பாடல்கள், நாலாயிரம் திவ்ய பிரபந்தம், லலிதாம்பாள் ஷோபனம், கம்பராமாயணம், திருவருட்பா, கந்தர் அநுபூதி போன்றவற்றை ஒப்பிக்கும் போட்டிகள் நடைபெற் றன. ஆளுமை மேம்பாடு என்ற தலைப்பில் நீதி நூல்கள், திருக் குறள், மரங்களின் பெயர்கள், தாவரங்கள் பெயர்கள், பறவை கள் பெயர்கள் ஒப்பித்தல், கதை சொல்லுதல் போன்ற போட்டிகள் நடைபெற்றன. பாரம்பரிய விளையாட்டுகள் என்ற தலைப்பில் பல்லாங்குழி, இலை வரைதல், பூ பறிக்க வருகிறோம் உட்பட பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகேவுள்ள செவரப்பூண்டி ராஜகோபால் கவுண்டரின் காமாட்சி அம்மன் நாடகக் குழு நடத்தும் ‘வன்னியர் புராணம்’ தெருக்கூத்து நடை பெற்றது. ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்தனர். தமிழகத் தின் வட மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் வருடத்தில் 6 மாதங்கள் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி முதல்முறையாக சென்னையில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டிவிஎஸ் கேப்பிட்டல் நிறுவனத் தின் தலைவர் கோபால் சீனிவாசன், ஜிஎம்ஆர் நிறுவனத்தின் தலைவர் பி.வி.என்.ராவ், இந்து ஆன்மிக மற்றும் சேவை மையத் தின் துணைத் தலைவர் ராஜ லட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்து ஆன்மிக மற்றும் சேவை மையத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆடிட்டர் குருமூர்த்தி கூறும்போது, ‘‘இந்த ஆன்மிக கண்காட்சி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 6 நாட்களில் மொத்தம் 9 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். 6 தலைப்புகளில் நடத்தப்பட்ட 1079 பாரம்பரிய போட்டிகளில் மொத்தம் 1 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன’’ என்றார்.